” அட்டை கத்தி கோழையல்ல இவன், சோழன் வழி வீரன் ” மனோ ஆவேசம் !!

” அட்டை கத்தி கோழையல்ல இவன்,   சோழன் வழி வீரன் ” மனோ ஆவேசம் !!

தான் சோழன் பரம்பரையில் வந்த தமிழ் இலங்கையன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.

பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒரு அட்டைக்கத்தி வீரனல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

மனோ கணேஷனின் முழுமையாக பேஸ்புக் பதிவு

சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே, பகிரங்கமாக “உண்மையை”, அவர்களது தாய்மொழியிலேயே எடுத்து கூறி, “உங்களை திருத்தி கொள்ளுங்கள்” என துணிச்சலாக அடித்து கூறும் எனக்கு, சில உள்நாட்டு, வெளிநாட்டு அறிவாளிகள் இப்போது அறிவுரை கூற வருகிறார்கள்.

அதென்ன அறிவுரை?

“மனோவும், சரத்தும் ஒரே கூட்டணிகாரர்கள்தானே? தேர்தலுக்கு முன் சரத் பற்றி மனோவுக்கு தெரியாதா? 2010 ஜனாதிபதி தேர்தலில் சரத்துக்கு ‘ஓட்டு’ வாங்கி கொடுத்தவர்தானே” என எங்களை சிலர் விமர்சிக்கிறார்கள்.

ஒரே கூட்டணியில் இருந்து விட்டு, பின்னர் எனது முகநூலில், டுவீடரில் பொன்சேகா உட்பட பலரை நான் விமர்சிக்கிறேன் எனவும் என்னை இவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இந்த, சில “அறிவாளி”களுக்கு சில விஷயங்கள் எப்போதும் புரிவதில்லை. இவர்கள் தூங்குவதாக நடிக்கிறார்களா? அல்லது உண்மையிலேயே தூங்குகிறார்களா? என தெரியவில்லை.

இந்த நாடு ஒரு பேரினவாத நாடு. ஆளும் கட்சி, எதிர் கட்சி எல்லாவற்றிலும் இனவாதம் நீக்கமற நிறைந்துள்ளது. இதுதான் யதார்த்தம்.

இதை நான் எப்போதும் சொல்லி வருகிறேன். இந்நாட்டில் இவர்கள் எவரும் நெல்சன் மண்டேலா கிடையாது. இருப்பவர்களை வைத்து, அவ்வப்போது, சொல்ல வேண்டியதை முகத்துக்கு நேரே சொல்லி, அடித்து, திருத்தி, எமது பாதையில் நான் போகிறேன்.

இதைவிட வேறு என்ன செய்ய முடியும்? எதிரணியில் இருந்து விலகி ஆளும் அணியில் சேர சொல்கிறார்களா?

ஆளும் அணி நியாயமானதாக இருந்தால் அதை நான் செய்வேன். நல்ல ஒரு அமைச்சு பதவியை வரப்பிரசாதங்களுடன் கேட்டு வாங்கி கொள்ளலாம்.

ஆனால் இன்று ஆளும் அணி இதைவிட, “பேரினவாதமாக” அல்லவா இருக்கிறது? அங்கே சென்று நான் எப்படி ஆடை அணிந்து வாழ்வது?

2010ம் வருட தேர்தலில், பொன்சேகாவை நிறுத்தி நாம் வெல்லவில்லை. ஆனால் இதனால் இனவாத வாக்கு வங்கி சரிபாதியாக உடைந்தது.

இந்த “அறிவாளி”களுக்கு எமது இந்த சாணக்கியம் புரிவதில்லை.

இந்நாட்டில் நானோ, எந்தவொரு தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாகி, அரசாங்கம் அமைக்க முடியாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆளும் அணி, எதிரணி என்று பிரித்து பார்க்காமல், இனவாதம் பேசுகின்றவர்களை நேரடியாக கண்டிக்கும் என்னை இந்த “அறிவாளிகள்” பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. முட்டாள்தனமாக குறை கூறாமலாவது இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான விமர்சனத்தை எதிர்கொள்ள, அவசியமானால் என்னை திருத்திக்கொள்ள, நான் எப்போதும் தயார். ஆகவே யார் வேண்டுமானாலும் வந்து கேள்வி கேளுங்கள்.

அதேபோல் மாற்று வழி என்ன…? ஆயுதம் தூக்குவதா? சரணடைவதா? குறட்டைவிட்டு தூங்குவதா? விலைபோய் பணம் சம்பாதிப்பதா? என்று ஆலோசனை கூறுங்கள்.

நான் ஒரு அட்டைக்கத்தி வீரனல்ல. நான், சோழன் பரம்பரையில் வந்த தமிழ் இலங்கையன். நேரடியாக பாராளுமன்றத்திலும், பிரபல சிங்கள ஊடகங்களிலும், இனிய சிங்கள மொழியில் பேசிவிட்டுதான், நான் அவற்றை எனது சொந்த முகநூல் தளத்தில் பதிவிடுகிறேன்.

எனது அதிகாரபூர்வ முகநூல், டுவீடர் பொதுவெளி தளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என நான் நன்கு கற்று அறிந்துள்ளேன். இப்போது என்னை பார்த்துதான் பல பொது மனிதர்கள் இதை கற்று வருகிறார்கள்.

இதைவிட நெருக்கடியான 2005-2010 காலத்திலேயே இன்றைய ஜனாதிபதி, பலமிக்க “பாதுகாப்பு செயலாளராக” இருந்தவேளையிலேயே தெருவில் இறங்கி போராடியவன், நான்..!

ஆகவே “அறிவாளிகள்” என தம்மை தாமே நினைத்துக் கொண்டு பொதுவெளியில் உளறிக்கொட்ட வேண்டாம். என்னை என் வழியில் போக விடுங்கள்

administrator

Related Articles