இந்திய அணிக்காக விளையாடியது எங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே மகிழ்ச்சி – நடராஜன் தாய் பெருமிதம்!

இந்திய அணிக்காக விளையாடியது எங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே மகிழ்ச்சி – நடராஜன் தாய்  பெருமிதம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தடம் பதிக்கும் தனது கனவை நனவாக்கியுள்ள தமிழக வீரர் நடராஜன், முதல் போட்டியில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதனால் அவரது குடும்பம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளது.

அசாத்திய திறமை பெற்றிருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியே கிடைத்தாலும், ஆடும் லெவனில் இடம்பெறுவது குதிரைக் கொம்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து தமிழகத்துக்கு பெருமை தேடி தந்துள்ளார் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்படும் அளவுக்கு நடராஜனை அடையாளம் காட்டியது அவரது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு. துபாயில் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், 16 விக்கெட்களை வீழ்த்தினார். பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த நடராஜனை, ஹைதராபாத் அணி நம்பிக்கை நட்சத்திரமாகவே கொண்டாடியது.

இதன் பிரதிபலனாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நடராஜன் சேர்க்கப்பட்டார். எனினும் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், புதன்கிழமை கான்பெராவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தடம் பதித்தார் நடராஜன். அவரை கேப்டன் கோலி உள்ளிட்ட சக வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடராஜன் விளையாடிய போட்டியை அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தே தொலைக்காட்சியில் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் லபுசாங்கேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார் நடராஜன். 10 ஓவர்களை வீசிய அவர் 70 ரன்களை விட்டுக் கொடுத்து, ஒரு மெய்டனுடன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடராஜன் விளையாடியது தங்கள் ஊருக்கே மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாய் சாந்தா தெரிவித்தார்.

administrator

Related Articles