தன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்வாள் என நம்பி, 20 லட்ச ரூபாய் செலவு செய்து, இளம்பெண் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைத்தார் இளைஞர் ஒருவர். ஆனால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கனடா செல்லும் ஆசையில் இருந்துள்ளார்.
அப்போது, குடும்ப நண்பர் ஒருவர், தனக்குத் IELTS தேர்வெழுதி வெற்றி பெற்ற பெண் ஒருவரைத் தெரியும் என்றும், ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு, அவரை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க வசதி இல்லை என்றும் கூறியுள்ளார்.
அந்த இளைஞரின் குடும்பத்தினர் சென்று அந்தப் பெண்ணை பார்த்துள்ளார்கள். ஆனால், அவருக்கு 18 வயதாகவில்லை. ஆகவே, அவரை தாங்களே செலவு செய்து கனடா அனுப்புவது என்றும், அவருக்கு 18 வயது ஆனபிறகு அவருக்கும் தங்கள் மகனுக்கும் திருமணம் செய்துவைப்பது என்றும் முடிவு செய்துள்ளார்கள்.
திருமணத்துக்குப் பின், கணவன் மனைவி விசாவில் அவரை கனடாவுக்கு அந்தப் பெண் அழைத்துச் செல்வது என பேசி முடித்துள்ளார்கள் இரு குடும்பத்தினரும். 2018ஆம் ஆண்டு, கல்வி விசாவில் கனடா சென்றுள்ளார் அந்தப் பெண்.
2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், அந்தப் பெண் இந்தியாவுக்கு வந்துள்ளார். நவம்பர் மாதம் 1ஆம் திகதி அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் திருமணம் நடந்துள்ளது, 6ஆம் திகதி அவர் மீண்டும் கனடாவுக்குத் திரும்பிச் சென்றுள்ளார். இந்த தகவல் தாமதமாகவே அவரை கனடாவுக்கு அனுப்பிய குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபமடைந்த அந்த இளைஞர் குடும்பத்தினர் பொலிசில் புகாரளித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின்போது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துள்ள நபர், தன் மனைவி கனடா செல்வதற்காக ஒரு குடும்பத்திடம் 20 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும், தான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், பொலிசார் அந்தப் பெண் மீது, மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்கள். அவரைக் கைது செய்யும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பெண் கனடாவில் இருக்கிறார்!