” உடன் பிறவா அண்ணன் தாக்கியதில் 7 வயது சிறுவன் பலி” கிளிநொச்சியில் நடந்த கொடுமை!!

” உடன் பிறவா அண்ணன் தாக்கியதில் 7 வயது சிறுவன் பலி”  கிளிநொச்சியில் நடந்த கொடுமை!!

உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி கச்சேரி வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தயா (வயது -7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு சென்றுள்ளார். சிறுவனுக்கு 9 வயதில் மூத்த சகோதரனும் 4 வயதில் இளைய சகோதரனும் உள்ளனர்.

சிறுவனின் தந்தை தனது மூத்த சகோதரனின் வீட்டில் மூன்று பிள்ளைகளையும் கைவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவர் தலைமறைவாகிய நிலையில் மூத்த சகோதரினின் வீட்டில் மாடு ஒன்றும் திருட்டுப் போயுள்ளது.

அதனால் தனது சிறிய தந்தை மாட்டை திருடிவிட்டு தப்பித்துள்ளார் என உடன் பிறவா சகோதரர்கள் மூவரையும் 17 வயது இளைஞன் கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

அதில் கடந்த 22ஆம் திகதி 7 வயது உடன் பிறவா சகோதரனை ஆள்கள் அற்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளைஞன், மாட்டை கேட்டு தாக்கியுள்ளார். அதனால் தாக்குதலுக்குள்ளான சிறுவன் சுயநினைவற்று நிலத்தில் சுருண்டு வீழ்ந்துள்ளார்.

அதனால் சிறுவனை அந்த இடத்தில் கைவிட்டு இளைஞன் வீடு திரும்பியுள்ளார். வீடுதிரும்பாத சிறுவனை உறவினர்கள் தேடிச் சென்ற போது நிலத்தில் சுயநினைவற்று கிடந்துள்ளார். அதனால் சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் உறவினர்களால் சேர்க்கப்பட்டார்.

சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் 5 நாள்கள் தொடர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் சிறுவன் இன்று காலை உயிரிழந்தார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவன் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டதால் மூளையில் ஏற்பட்ட குருதிக் கசிவால் உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார், தாக்குதல் நடத்திய 17 வயது இளைஞன் தலைமறைவாகிய நிலையில் தேடி வருகின்றனர்

administrator

Related Articles