உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பணிவுடன் ஏற்கிறேன்: சூர்யா

உயர் நீதிமன்றத்தின்  உத்தரவைப் பணிவுடன் ஏற்கிறேன்: சூர்யா

சென்னை உயர் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவைப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்க நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்வுக்குத் தயாராகி வந்தபோது அச்சத்தால் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என கூறுகிறது’ எனக் கருத்து தெரிவித்து இருந்தார். சூர்யாவின் இந்தக் கருத்து நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த 13-ம் தேதி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சூர்யா மீது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாமா என்பது குறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கருத்து கோரப்பட்டது. ஆனால், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தேவையில்லை என தலைமை நீதிபதிக்கு விஜய் நாராயண் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதையடுத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு நேற்று பிறப்பித்துள்ள விரிவான உத்தரவு:

அர்ப்பணிப்பு உணர்வு

இந்த விஷயத்தில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம். அதேநேரம் ஊரடங்கு காலகட்டத்தில் நீதிபதிகளும், நீதித்துறை ஊழியர்களும், நீதிமன்றமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளதை கண்டிப்பாக பதிவு செய்ய விரும்புகிறோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நம் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைக் காக்கும் நீதித்துறையின் மீது எனக்கு எப்போதும் உயர்ந்த மதிப்பு உண்டு. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள நியாயமான உத்தரவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்”.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles