ஊடகமும், அரசியலும்! கையறு நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி!!

ஊடகமும், அரசியலும்! கையறு நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி!!

( ஹரேந்திரன் .k )

அரசியல் என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அரசியல் கொடுக்கல், வாங்கல்களுக்கு இராஜதந்திரம், அரசியல் வியூகம் என்று எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வாக்களித்த மக்களுக்கு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

வென்றுவிட்டு, மக்கள் ஆணை கிடைத்துவிட்டது என்பதற்காக நீங்கள் செய்யும் அனைத்தையும் சரியென்று நினைத்துவிடக்கூடாது. அப்படி மெத்தனமாக நினைத்தால் அதற்கான விலையையும் கொடுத்தாக வேண்டும்.

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பிற்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணி மீது அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள், வாக்களித்த மக்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அந்த விமர்சனங்கள் எதிர்ப்பு அரசியல் நோக்கத்தில் அல்ல என்பதை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செய்திகளை ஒரு தேசிய பத்திரிகை முழுமையாக நிராகரிப்பதாக தெரியவருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித்தான், துமிந்த சில்வாவின் சகோதரர் இயக்கும் பிரபல தமிழ் வானொலியைக் காண்பித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணியை மசிய வைத்துள்ளதாகத் தெரிகிறது.

‘அண்ணனின் விவகாரத்தில் கையெழுத்திட்டால் முழுமையான ஆதரவு தருகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளதாம். (இது உயர்மட்டத்தில் பேசப்பட்டது.) ‘இல்லையெனில் வைச்சு செய்வோம்’ என்பதுதான் அதன் மறைமுக அர்த்தமும். தேசிய பத்திரிகையொன்று கைவிட்டுள்ள நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அந்த பிரபல நடுநிலையெனக் கூறிக்கொள்ளும் வானொலியைப் பகைத்துக்கொண்டு அரசியல் செய்வதில் உள்ள சிரமங்களையும், பழைய அரசியல் நட்பையும் கருத்திற்கொண்டு முற்போக்குக் கூட்டணி கையெழுத்திட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

மக்கள் எண்ண ஓட்டத்தை அறியாது, மக்கள் வெறுக்கும் இவ்வாறான விவகாரங்களில் தீர்மானங்களை எடுப்பது சிக்கலானதுதான். அவ்வாறு தீர்மானம் எடுத்துவிட்டு மெத்தனமாக சொல்லும் விளக்கங்கள் அனைவரையும் இன்னும் முகம் சுளிக்க வைக்கிறது.

‘மனோ கணேசன்’ இவ்வாறு செய்துவிட்டாரா என்பதுதான் ஆற்றமுடியாத ஆதங்கமாக ஏராளமானோருக்கு இருக்கிறது. ஊடகம் மக்களுக்கானது. அதில் அரசியலும் வணிகமும் கலந்திருப்பதை அறிவோம். ஆனால், மக்கள் அருவருக்கும் அரசியலை அந்த ஊடகங்கள் செய்யுமாயின், மக்கள் பிரதிநிதிகளாக அதனை எதிர்த்து பேசலாம். அதற்கு மக்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்க்கட்சியில் உங்களுடன் அரசியல் செய்யும் உறுப்பினர்கள் குறித்த ஊடகத்தின் சிங்கள மொழிச்சேவையின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். அந்த மக்களும் விழித்துக் கொண்டுள்ளனர்.

வளர்ந்து உயர இருப்பதால் ஊடகங்கள் எதைச் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது. அதனால், கடந்த காலத்தைப் போல தைரியமான மக்கள் நலன்சார் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் உங்களை விமர்சிப்பவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

துமிந்தவின் பொதுமன்னிப்பில் கையெழுத்திடும் உங்களின் தீர்மானத்தை மீளப் பெறவேண்டும். அதற்காக அந்த வானொலி உரிமையாளருடன் சமரசம் செய்துகொள்வது உங்கள் சாணக்கியம். அவ்வாறு இல்லையெனில், அந்த ஊடகத்தின் முகத்திரையை நீங்கள் கிழிக்கலாம். ஓரளவு உண்மையாக செயற்படும் ஊடகங்கள் எவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

ஊடகப் புறக்கணிப்பும், பேரம்பேசலும் என்ற இங்கே சொல்லப்பட்ட விவகாரங்கள் பொய்யானவை என்றால் அதனையும் மறுக்கலாம். ஆனால் கையெழுத்திட்டத்திற்கு மெத்தனமாக நீங்கள் சொல்லும் விளக்கத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறான விவகாரங்களில் மக்களின் மனநிலையையும் அறிந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். தலைவர்கள் மக்களுக்கானவர்களாக இருக்க வேண்டும். பின்னர் உங்கள் அரசியல், ஊடக விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக ஒருவிடயம், உங்களுக்கு நாங்கள் யாரும் பாடம் எடுக்கவில்லை. ஆனால் பெருந்தலைவர்களுக்கு காலம் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். காரணம் உங்களைவிட மக்களும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

administrator

Related Articles