ஒபாமா புத்தகம்: இந்திய எதிர்காலத்தை குறைத்து மதிப்பிடுகிறாரா முன்னாள் அதிபர்? எது உண்மை?

ஒபாமா புத்தகம்: இந்திய எதிர்காலத்தை குறைத்து மதிப்பிடுகிறாரா முன்னாள் அதிபர்? எது உண்மை?
  • (செளதிக் பிஸ்வாஸ்}

A Promised Land – அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நினைவுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த புத்தகம், இந்தியாவில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றிய அவரது வெளிப்படையான மனம் திறந்த கருத்துக்கள், காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே கோபத்தை தூண்டியது. ஆனால், ராகுலின் எதிர்ப்பாளர்கள் ஆரவாரக்குரலை எழுப்பியுள்ளனர்.

ஒபாமாவின் அரசியல் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட நினைவுக் குறிப்பின் முதல் பகுதியான ‘A Promised Land’, என்ற புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

எழுத்துநடை சுவாரசியமாகவும் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது. 2010 நவம்பரில் தாம் மேற்கொண்ட முதல் இந்திய பயணத்தை ஒபாமா சுமார் 1,400 வார்த்தைகளில் வருணித்துள்ளார்.

தற்போதைய எதிர்கட்சியான காங்கிரஸ் அப்போது ஆட்சியில் இருந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து ஒபாமா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது?

“முஸ்லிம் விரோத உணர்வுகள் அதிகரித்து வருவதால் இந்து தேசியவாத கட்சி பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது” என்று தாம் அஞ்சுவதாக மன்மோகன் சிங் தம்மிடம் கூறியதாக ஒபாமா தனது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார். அப்போது பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தது.

இந்தியாவின் நிதித்தலைநகராக அறியப்படும் மும்பை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக மன்மோகன் சிங் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தார்.

மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். “இந்த கட்டுப்பாடான அணுகுமுறைக்கு அவர் அரசியல் விலையை செலுத்த வேண்டியிருந்தது,” என்று ஒபாமா எழுதியுள்ளார்.

மன்மோகன் சிங் அவரிடம், ” அதிபர் அவர்களே, இந்த நிச்சயமற்ற சூழலில், மத மற்றும் இன ஒற்றுமைக்கான அழைப்பு, மக்களை தவறாக வழிநடத்தக்கூடும். மேலும் அது இந்தியாவோ அல்லது வேறு இடமோ, அரசியல்வாதிகள் இதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வது அவ்வளவு கடினம் அல்ல,” என்று கூறினார்.

இதை ஒபாமா ஒப்புக்கொண்டார். தமது பிராக் பயணத்தின் போது வெல்வெட் புரட்சிக்குப் பின்னர் செக் குடியரசின் முதல் அதிபராக பதவியேற்ற வட்ஸ்லாஃப் ஹேவலுடனான தனது உரையாடலையும், ஐரோப்பாவில் தாராளமய அலை பற்றிய அவரது எச்சரிக்கையையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.

“உலகமயமாக்கல் மற்றும் வரலாற்று பொருளாதார நெருக்கடியும் ஒப்பீட்டளவில் பணக்கார நாடுகளில் இந்த போக்குகளுக்கு உந்துதலாக இருக்கும்நிலையில், நான் அவற்றை அமெரிக்காவில் கூட பார்க்கிறேன், ஆகவே இந்தியா இதை எவ்வாறு தவிர்க்க முடியும்?”என்று ஒபாமா எழுதியுள்ளார்.

ஒபாமாவின் டெல்லி பயணத்தின் முதல் நாள் மாலை, மன்மோகன் சிங் அவரை சிறப்பித்து இரவு விருந்து அளித்தார். மன்மோகன் சிங் ‘அடிவானத்தில் தெரியும் மேகங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்’.

மன்மோகன் சிங் பொருளாதார மந்தநிலை பற்றி குறிப்பிட்டார். 2007 ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடியால் உலகம் முழுவதும் தடுமாறத் தொடங்கியது.

அணு ஆயுதங்களை தன்வசம் கொண்டுள்ள அண்டை நாடான பாகிஸ்தானுடன் நிலவும் தொடர்ச்சியான பதற்றம் குறித்து இந்தியப் பிரதமர் கவலைப்பட்டதாக ஒபாமா எழுதியுள்ளார்.

“பாகிஸ்தானுக்கும் அப்போது ஒரு சிக்கல் இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மும்பை ஹோட்டல்களிலும் மற்ற இடங்களிலும் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்க, தொடர்ந்து அந்த நாடு தவறிவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் பதற்றம் அதிகரித்தது. ஏனெனில் இந்த தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டது. “

இந்தியாவின் பொருளாதார மாற்றத்தின் முக்கிய வடிவமைப்பாளர், புத்திசாலி, சிந்தனைவாதி , நேர்மையானவர் மற்றும் விசுவாசமானவர்’ என்று ஒபாமா மன்மோகன் சிங்கை வர்ணித்துள்ளார்.

திரு. சிங் ஒரு ” பணிவான தொழில்நுட்ப வல்லுநர்” என்று ஒபாமா எழுதியுள்ளார். அவர் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து அவர்களது நம்பிக்கையை பெற்றது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தினார். மேலும் அதே நேரத்தில் நேர்மையானவர் என்று தாம் சம்பாதித்த பெயரையும் பராமரித்தார்.

“அவர் வெளியுறவுக் கொள்கை குறித்து எச்சரிக்கையாக இருந்தார். வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் நோக்கங்களைப் பற்றி சந்தேகத்துடன் பார்க்கும் இந்திய நிர்வாகத்துறையின் சிந்தனைக்கு அதிக மாறாக செல்ல அவர் விரும்பவில்லை. அவர் ஒரு அசாதாரண புத்திசாலி மற்றும் பணிவுள்ளம் கொண்ட நபர் என்ற எனது ஆரம்ப கணிப்பை, அவருடன் நான் செலவிட்ட நேரங்கள் உறுதி செய்தது , ” என்று ஒபாமா எழுதியுள்ளார்.

சோனியா காந்தி பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது?

அப்போதைய ஆளும் கட்சி காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி, ‘அறுபது வயதுக்கு மேற்பட்ட ஒரு அழகான பெண்’ என்று ஒபாமாவால் குறிப்பிடப்பட்டுள்ளார். பாரம்பரிய புடவையில், கருமையான கண்களுடன், அரச பாணியுடன் அவர் திகழ்ந்தார்.

“ஐரோப்பிய வம்சாவளி பெண்ணான இவர் ஒரு தாயின் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு வீட்டிலேயே இருந்தார். 1991 ல் இலங்கை விடுதலை போராளியான தற்கொலை குண்டுவெடிப்பாளர் காரணமாக தனது கணவரை பறிகொடுத்தபிறகு, அந்த துக்கத்திலிருந்து மீண்டுவந்து, குடும்பத்தின் அரசியல் பாரம்பரியத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு ஒரு முக்கிய தேசியத் தலைவராக உருமாறினார். “

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியின் கணவர் ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார். 1991 ல் தமிழக மாநிலத்தில் நடந்த ஒரு பேரணியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இரவு விருந்தின்போது சோனியா காந்தி குறைவாக பேசினார், ஆனால் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தார் என்று ஒபாமா எழுதியுள்ளார். “அவர் கொள்கை தொடர்பான விஷயங்களை மன்மோகன் சிங் பக்கம் கவனமாக திருப்பிக் கொண்டிருந்தார். மேலும் பேச்சின் திசையை தனது மகன் பக்கம் திருப்ப முயற்சித்தார்.”

“இருப்பினும் அவரது அதிகாரத்தின் அடிப்படை, திறமை மற்றும் வலுவான புத்திசாலித்தனம் என்பது எனக்குத்தெளிவாகத் தெரிந்தது,” புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் ஒபாமா.

ராகுல் காந்தி குறித்து எழுதப்பட்டுள்ளது என்ன?

ராகுல் காந்தியை ‘ மிடுக்கானவர் மற்றும் உற்சாகமானவர்’ என்று ஒபாமா அழைத்தார். அவருடைய முகஜாடை அவரது தாயை ஒத்திருக்கிறது. என்றும் அவர் கூறுகிறார்.

“எதிர்கால முற்போக்கு அரசியல் குறித்து அவர் தனது கருத்துகளை தெரிவித்தார். சில சமயங்களில் எனது 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரசார விவரங்களையும் அவர் கேட்டார்.” என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் அவருக்குள் ஒரு பதற்றமும் வேதனையும் இருந்தது. உதாரணமாக, தனது படிப்பை முடித்து, ஆசிரியரைக் கவர விரும்பும் ஒரு மாணவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மன அளவில் அந்த விஷயத்தை அடைய தகுதி இல்லாமல் தவிக்கும் அல்லது அதன் மேல் ஆர்வம் இல்லாமல் இருக்கும் அந்த மாணவரைப்போல இவர் காணப்படுகிறார். “

(ராகுல் காந்தி பற்றிய இந்தக் கருத்து நியூயார்க் டைம்ஸில் ஒரு மதிப்பாய்வில் வெளியிடப்பட்டது. சில காங்கிரஸ் கட்சியினர் இந்த கருத்தால் கோபமடைந்து ஆட்சேபத்தை வெளியிட்டனர்.)

ஒபாமா பார்வையில் இந்தியாவின் எதிர்காலம்

இன்றைய இந்தியா, “பல அரசு ஊழல்கள், அரசியல் கட்சிகளிடையே கடுமையான சண்டைகள், ஏராளமான ஆயுதப் பிரிவினைவாத இயக்கங்கள் மற்றும் அனைத்து வகையான ஊழல் மோசடிகளையும் சந்தித்து முறியடித்த ஒரு வெற்றிக் கதை” என்று ஒபாமா எழுதியுள்ளார்.

ஆனால் மேம்பட்ட ஜனநாயகம் மற்றும் கட்டுப்பாடற்ற பொருளாதாரம் இருந்தபோதிலும், காந்தியின் கற்பனையான சமத்துவம், அமைதி மற்றும் சகவாழ்வு சமூகத்தின் உருவத்தில் இந்தியா இன்னும் அரிதாகவே பொருத்துகிறது. சமத்துவமின்மை உச்சத்தில் உள்ளது மற்றும் வன்முறை ‘இந்திய வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது’.

நவம்பர் மாலையில், மன்மோகன் சிங்கின் வீட்டை விட்டு வெளியேறும்போது, 78 வயதான பிரதமர் தனது பொறுப்பிலிருந்து விலகும்போது என்ன நடக்கும் என்று தாம் நினைத்துப்பார்த்ததாக ஒபாமா எழுதுகிறார்.

“ராகுல் காந்தியை இந்த ஒளிப்பந்தம் வெற்றிகரமாக வந்தடையுமா, அவரது தாயார் நிர்ணயித்த லட்சியம் நிறைவேறுமா, பாஜக அறிமுகப்படுத்திய பிளவுபடுத்தும் தேசியவாதத்தை புறந்தள்ளி காங்கிரஸின் ஆதிக்கம் தொடருமா?”என்றெல்லாம் தனது மனதில் ஓடிய எண்ண அலை கேள்விகளை ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, எனக்கு சந்தேகம் இருந்தது. இது சிங்கின் தவறு அல்ல. பனிப்போருக்குப் பிந்தைய தாராளமய ஜனநாயக நாடுகளின் வழியைப் பின்பற்றியும் , அரசியலமைப்பு முறையை நிலைநிறுத்தி அன்றாட பணிகளைச் செய்தும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்ப பணிகளைச் செய்தும், சமூக பாதுகாப்பின் விரிவாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டும் அவர் தனது பங்கைக் ஆற்றிக் கொண்டிருந்தார்.”

“என்னைப் போலவே, அவரும் எல்லா ஜனநாயக நாடுகளிடமிருந்தும், குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற பெரிய, பல இன பல மத சமூகங்களில் இருந்தும் இதை எதிர்பார்க்கலாம் என்ற அதே நம்பிக்கையுடன் இருந்து வந்தார்.”

ஆனால் “வன்முறை, பேராசை, ஊழல், தேசியவாதம், இனவெறி மற்றும் மத சகிப்பின்மை போன்ற மனித ஆசைகள், நிச்சயமற்ற தன்மை மற்றும் தனித்தனமையை கைவிட்டு மற்றவர்களை குறைத்துக்காட்டும் பயனற்ற தன்மை போன்றவை எந்த ஜனநாயகத்தாலும் நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வலுவானவை ,” என்றும் ஒபாமா தனது புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார்.

“இதுபோன்றவை எல்லா இடங்களிலும் காத்திருக்கின்றன. வளர்ச்சியின் வேகம் குறையும்போதோ அல்லது மக்கள்தொகையின் வடிவம் மாறும்போதோ அல்லது ஒரு கவர்ந்திழுக்கும் தலைவர் , பயம் மற்றும் அதிருப்தியின் அலைகளில் சவாரி செய்யும்போதெல்லாம் அவை எழுந்து மேலே வந்து விடும்.”

2014 இல் நரேந்திர மோதி தலைமையிலான இந்து தேசியவாத கட்சி பாஜக ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றபோது, ஒபாமாவின் கேள்விக்கான பதில் கிடைத்தது.

ஒபாமா மீண்டும் 2015 இல் இந்தியா வந்தார். நரேந்திர மோதி அப்போது பிரதமராக இருந்தார். அதிபர் பதவியில் இருந்தபோது இரண்டு முறை இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் முதல் அதிபராக ஒபாமா திகழ்கிறார்.

ஆனால் முன்னாள் அதிபரின் நினைவுக் குறிப்புகளின் முதல் பகுதி, 2011 இல் ஒசாமா பின் லேடனின் மரணத்துடன் முடிவடைகிறது.

இரண்டாம் பாகத்தில் அவர் நரேந்திர மோதி குறித்த தனது கருத்துகளை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

administrator

Related Articles