கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் உதவிகளை வழங்க கொட்டகலை பிரதேச சபையில் நிதி ஒதுக்கீடு!! ராஜமணியின் “மணி” வேலை!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் உதவிகளை வழங்க கொட்டகலை பிரதேச சபையில் நிதி ஒதுக்கீடு!! ராஜமணியின் “மணி” வேலை!!

கொட்டகலை பிரதேச சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான போஷாக்கு உணவு மற்றும் பிரசவ காலத்துக்குத் தேவையான சகல பொருட்களையும் இலவசமாக வழங்குவதற்கு பிரதேச சபையின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

தலைவர் உட்பட சகல உறுப்பினர்களும் கலந்து கொண்ட மேற்படி அமர்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொட்டகலை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட வீதிகள், வடிகான்கள், விளையாட்டு மைதானம் முதலானவற்றை புனரமைக்கவும் பாதுகாப்பு வேலிகளை அமைக்கவும் இராஜானாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் 15 மில்லியன் ரூபா நிதியையும், பொது இடங்களில் வடிகான் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு கோடி ரூபாவையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். அதேபோல், இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன் ஆகியோர் இணைந்து கொட்டகலை நகர விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்காக 8 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்கள்.

மேலும் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றார்கள். அண்மையில் ஆசிரியர்கள் 5 பேரும் மாணவர்கள் 16 பேரும் கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 150 பேர் வரையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். எமது பிரதேசத்தை அண்மித்த தலவாக்கொல்லை நகரில் மதுபானசாலை ஒன்று மூடப்பட்டுள்ளது. இதில் பணிபுரிந்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், பொது சுகாதாரம் கருதி அவர்கள் தொடர்பான விபரங்களை தந்துதவுவதோடு, பொது மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.
கொட்டகலை கொமர்ஷல் பகுதியைச் சேர்ந்த ஆகில் தோட்டப் பகுதியில் ஆரம்பப் பாடசாலை ஒன்று இல்லாமல் உள்ளதால் பிள்ளைகள் கல்வி ஒஏற முடியாத நிலையில் உள்ளார்கள். கொட்டகலை பாடசாலைக்கும் அட்டன் நகரப் பாடசாலைகளுக்கும் செல்ல முடியாமல் இடைவிலகல் அதிகரித்து வருகின்றது. எனவே, கேம்பிரிஜ் கல்லூரிக்கு அருகில் ஆரம்பப் பாடசாலை ஒன்ற அமைத்துக் கொடுக்குமாறு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இனைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை ஒன்ற முன்வைத்துள்ளேன்.

இந்த விடயத்தில் சகல உறுப்பினர்களது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.
பரீட்சைகள் நடைபெறும் மண்டபங்களுக்கு பிரதேச சபையின் ஊடாக தொற்று நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளதால் தேவையான தொற்று நீக்கும் பணிகளை செய்து கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். அதிபர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

அத்தோடு, நுவரெலியா மாவட்டத்தில் மந்த போஷனை அதிகமாகவுள்ளதால் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள சகல கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுக்கு அமைவாக போஷாக்கு உணவுப் பொருட்களையும், பிரசவ காலத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் இலவசமாக கொடுத்து உதவ ஒரு இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப நிதியை மேலும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மேற்படி அமர்வில், சாமிமலை ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சகல உறுப்பினர்களும் தமது கண்டனத்தை தெரிவித்தார்கள். விளக்க மறியலில் வைக்கப்பட்டுள தொழிலாளர்களை பிணையில் எடுக்க சட்டத்தரணி பி. ராஜதுரை ஊடாக இ.தொ.கா. நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

administrator

Related Articles