‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் தனஞ்ஜெயனுடன் இணைந்துள்ளார் வெற்றிமாறன்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார் தனஞ்ஜெயன். அதனைத் தொடர்ந்து வெளியான போஸ்டர்கள், டீஸர் என அனைத்துமே இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டில் தனஞ்ஜெயனுடன் கைகோத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

இது தொடர்பாகத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியிருப்பதாவது:

“வெற்றிமாறன் போன்ற படைப்பாளி இப்படத்தின் மீது கவனம் கொள்வது இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் ஆசீர்வாதம் ஆகும். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்கள் மீது வெற்றிமாறன் எப்போதும் பெரும் காதல் கொண்டுள்ளார். அவ்வகையிலான படங்களுடன் எந்த வகையிலாவது தன்னை இணைத்துக் கொள்வதில் அவர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளார்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் சொல்லப்பட்டிருந்த விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தைப் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியுடன் அனைவரையும் பாராட்டினார். தனது க்ராஸ்ரூட் நிறுவனம் மூலம் இப்படத்தை வழங்குவதில் பெரும் உற்சாகமாக உள்ளார். அவர் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பது படத்தின் மீதான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது”.

இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.டி.எம் இயக்கியுள்ள ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விஷ்ணு ஸ்ரீ, இசையமைப்பாளர்களாக ஆதித்யா – சூர்யா, எடிட்டராக விமல் ராஜ், கலை இயக்குநராக ராஜேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

administrator

Related Articles