கொரோனா வைரஸ்: திறக்கப்படும் திரையரங்குகள் – என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

கொரோனா வைரஸ்: திறக்கப்படும் திரையரங்குகள் – என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

தமிழகம் முழுவதும் வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும், தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 31-ந் தேதி பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், 10-ந் தேதியே தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் 7 மாத காலத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், தூசி படிந்து காணப்படும் இருக்கைகளை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன. தியேட்டர்களை திறப்பது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

administrator

Related Articles