சமுர்த்தியின் நுண்நிதி பணம் நிலைபேரான அபிவிருத்திக்கு உங்களை அழைத்துச் செல்லுகின்றது! அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்

சமுர்த்தியின் நுண்நிதி பணம் நிலைபேரான அபிவிருத்திக்கு உங்களை அழைத்துச் செல்லுகின்றது! அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்

 (வாஸ் கூஞ்ஞ)

கடந்த காலத்தில் குடும்பங்களில் நிலவிய வறுமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பலதரப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட நுண்கடன் திட்டத்தால் எமது பெண்கள் ஏமாற்றப்பட்டு தற்கொலைக்கும் இழிவு நிலைக்கும் உள்ளாக்கியதை நாம் அறிவோம். ஆனால் சமுர்த்தி வங்கியானது ‘நிலைபேரான அபிவிருத்திக்கு நுண்நிதி பணம்’  என்ற தூரநோக்குடன் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயலில் உங்களை அழைத்துச் செல்லுகின்றது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் ஒன்பது சமுர்த்தி வங்கிகளில் முதன் முதலாக அடம்பன் சமுர்த்தி வங்கி கனணி முறையில் இயங்கும் ஒரு வங்கியாக தெரிவு செய்யப்பட்டு அதை செவ்வாய் கிழமை (15.12.2020) சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்ததுடன் சௌபாக்கிய வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல், மற்றும் கௌரவ அதிதிகளாக மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அலியார். மன்னார் மாவட்;ட திட்டமிடல் பணிப்பாளர் க. மகேந்திரன், மாந்தை மேற்கு பிரதேச செயலக கணக்காளர் மற்றும் உதவி திட்டப்பணிப்பாளர் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தொடர்ந்து உரையாற்றுகையில்

சமுர்த்தி என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான ஓர் செயல் திட்டமாகும். இந்த செயல் திட்டத்தில் எமது மன்னார் மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழுள்ள 24 ஆயிரம் பயனாளிகள் இருக்கின்றார்கள்.

இவ் மாவட்டத்தில் மாதாந்தம் சுமார் நாற்பது மில்லியன் ரூபா வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எமது மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் அதிக நிதி கொண்ட ஒரு திணைக்களமாக இது திகழ்கின்றது.

கடந்த காலத்தில் இவ் சமுர்த்தி பயனாளிகள் நிதியை பெறுவதற்கு பல நாட்கள் அலைந்திருப்பீர்கள். அல்லது அதிக நேரத்தை செலவழித்து இருப்பீர்கள். ஆனால் இனி இவ்வாறான நிலை உங்களுக்கு இருக்காது.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சமுர்த்தி கொடுக்கல் வாங்களை கனணி படுத்தலின் மூலம் எதிர்காலத்தில் ஐந்து நிமிடங்களுக்குள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

சமுர்த்தியின் தூரநோக்கு இங்கு பொறிக்கப்பட்டிருக்கின்றது அதாவது ‘நிலைபேரான அபிவிருத்திக்கு நுண்நிதி பணம்’ இதுவே இவர்களின் உச்சக்கட்ட இலக்காகும்.

கடந்த காலத்தில் நாம் எமது மாவட்டத்தை நோக்கும்போது இந்த நுண்கடன் திட்டமானது எமது மாவட்டதை ஆட்டிப்படைத்தது எமக்குத் தெரியும். புல்வேறு நிறுவனங்கள் மக்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதுவும் பெண்களை ஏமாற்றி இந்த நுண்கடனை வழங்கி அவர்களை தற்கொலைக்கும் அவர்களை இழிவு நிலைக்கும் தள்ளியதை நாம் நன்கு அறிவோம்.

இவற்றையெல்லாம் தீர்க்கவும் நீங்கள் கௌரவமாக இவ் நுண்நிதியைப் பெற்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்த சமுர்த்தியின் செயல்பாடு துணையாக இருக்கின்றது.

இந்த நேரத்தில் நான் இங்குள்ள சமுர்த்தியாளர்களை பாராட்டுகின்றேன் இவ் மாவட்டததிலுள்ள ஒன்பது வங்கிகளில் உங்கள் முயற்சியினால் இவ் அடம்பன் வங்கியே முதலாவது வங்கியாக கனணி படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வேறு மாவட்டங்கள் இவ் கனணி செயல்பாட்டுக்கு உள்ளாகியிருந்தபோதும் எமது மாவட்டம் இன்னும் இந்த செயல்பாட்டுக்கு வரவில்லையே என்று இருந்த குறையை இவ் அடம்பன் சுமுர்த்தி வங்கி நீக்கியிருப்பது இங்குள்ள அனைவரினதும் முயற்சியே ஆகும்.

இதைத் தொடர்ந்து இவ் வருடத்துக்குள் மேலும் மூன்று வங்கிகளை இவ்வாறு மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் இங்குள்ள ஒன்பது வங்கிகளையும் இவ்வாறான செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம்.

மன்னார் மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் ஜனாப் அலியாரை நாம் பாராட்ட வேண்டும் இவர் பல அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் தொடர்பாடல் இவற்றின் மூலம் இவற்றை மேம்படுத்தி வருகின்றார். இது பாராட்டப்பட வேண்டியதாகும்.

இவர் ஏற்கனவே தலைமை அலுவலகத்தில் சேவையாற்றிறமையால் அங்குள்ள அதிகாரிகளைக் கொண்டும் தனது அனுபவங்களைக் கொண்டும் இவ் மாவட்டத்துக்கான முன்னேற்றத்தை முன்னெடுத்து வருகின்றார்.

இங்கு இந்த சமுர்த்தி வங்கி கட்டிடம் இடவசதியற்ற முறையில் காணப்படுகின்றது. அடுத்த வருடம் உங்களுக்கு இதே இடத்தில் புதிய கட்டிடம் ஒன்றையும் அமைத்து தருவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.

இன்று ஒரு வயோதிப அம்மா தனது முதிர்ந்த வயதிலும் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் நிதி பெற்று வீட்டைக் கட்டி தான் வாழ துடிப்பதையும் பார்க்கும்போது அவவின் திடம் செயல்பாட்டை நாமும் நோக்கி செயல்திறன் கொண்டவர்களாக வாழ வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.

ஆகவே உங்களுக்கு வழங்கப்படும் நிதியை சிக்கனத்துடன் செலவழித்து அதிலிருந்து சிறிய தொகையையாவது மிச்சம் பிடித்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும்.

உங்களைப் பொறுத்தமட்டில் ஏனைய வங்கியைவிட இவ் சமுர்த்தி வங்கி உங்களுக்கு பல விடயத்திலும் சிறந்ததாக அரச சார்பான வங்கியாக இருக்கின்றது. ஆகவே இதன் மூலம் உங்கள் வாழ்வாதாரத்தை வளர்த்துக்கொள்ள உதவும் இதை நீங்கள் பயன்படத்திக் கொள்ள வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

administrator

Related Articles