“பண்டிகை”யை ஜோராக கொண்டாட சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்க அரசாங்கம் முடிவு

“பண்டிகை”யை  ஜோராக கொண்டாட சலுகை வட்டி  வீதத்தில் கடன் வழங்க அரசாங்கம் முடிவு

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த கடன் வழங்கல் 03 பிரிவுகளின் கீழ் இடம்பெறும். மாதத்திற்கு ரூ. 50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் பெருவோருக்கு ரூ. 50,000 கடனாக பெறலாம். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும் ரூ .50,000 க்கும் இடைப்பட்டவர்களுக்கு ரூ.25,000 கடன் வழங்கப்படும். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும் குறைவாக இருந்தால், கடன் தொகை ரூ .10,000 ஆகும். கடன்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படுகின்றன.

துணை நிவாரண நிதி வசதிகள் பெற விரும்பும் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் நிறுவன தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களின் சான்றளிக்கப்பட்ட பெயர் பட்டியலை சேவை நிலையத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, அந்த கிளையினால் ஊழியர்களின் கணக்குகளுக்கு உடனடியாக அந்த தொகை வரவு வைக்கப்படும்.

கடன் தொகை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அரவிடப்படும் மாத வட்டி 0.625 வீதமாகும். கடன் தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலப்பகுதியில் ஊழியரின் சம்பளத்திலிருந்து அரவிடப்படும்.

அரச ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கான கடன் வழங்கல் ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் பேணப்படும் அரச வங்கிகளில் தங்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவிற்குள் வராத ஆனால் அரச வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும் நாளாந்த வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் வங்கிகளின் ஊடாக நிதி வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோவிட் 19 சவாலுக்கு மத்தியில் பின்னடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக மீட்டு, 2020 ல் இழந்த முன்னேற்றத்துடன், 2021 ஆம் ஆண்டில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தொற்றுநோய் காலப்பகுதியில் சுமார் இரண்டு மாத பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் ஏற்றுமதி, சுற்றுலா, நிர்மாணத்துறை மற்றும் ஏனைய உற்பத்தி மற்றும் சேவைகளை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டுவர உழைக்கும் மக்களும் வர்த்தக சமூகமும் பெரும் தியாகங்களைச் செய்தனர். இதற்கு சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ் மற்றும் அரச சேவைகளிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. எனவே, 2020 ஆம் ஆண்டில் விவசாய உற்பத்தித் துறையில் ஒரு மறுமலர்ச்சிக்குள் பிரவேசிக்க முடிந்தது. நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான உணவு விநியோகத்தை இது உறுதி செய்தது. அவ்வாறு பங்களித்த மக்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற நிதி வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.12.16

administrator

Related Articles