சீனா மீதான பகை: இந்தியா, அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன?

சீனா மீதான பகை: இந்தியா, அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன?

உலகம் கொரோனா பெருந்தொற்றின் பிடியில் சிக்கியிருக்கும் வேளையில், அமெரிக்கா அடுத்த வாரம் அதிபர் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், டெல்லியில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இதன் முடிவில் இரு தரப்பினரும் பிஇசிஏ எனப்படும் அடிப்படை தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதுகாப்புத்துறை தொடர்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ராணுவ தளங்களில் இருந்து நேரடி பாதுகாப்பு தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தப் பின்னணியில் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியிருக்கிறார் பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமது.

ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சி, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்க தலைமை தளபதியாக ஓய்வு பெறுவதற்கு முன்னர் சீனாவை பற்றிய ஒரு முக்கிய விஷயத்தை தெரிவித்தார்.

“பனிப்போரின்போது சோவியத் யூனியனை எதிர்கொண்டது போல, விரைவில் சீனாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கும்,” என்பதுதான் அவருடைய கருத்து.

அவர் அன்று தெரிவித்த வார்த்தைகள், இன்று “சரி” என்று நிரூபணமாகியிருக்கின்றன.

இந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு “மிகப்பெரிய தலைவலி” சீனா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்டுடன் 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ‘கட்டண போர்’ தொடர்கிறது . ஆய்வாளர்கள் அதை பனிப்போரின் நாட்களுடன் ஒப்பிடும் அளவிற்கு உறவுகள் மோசமடைந்துள்ளன.

2012 ல் கிழக்கு ஆசியாவிற்கு சாதகமாக இருந்த ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் பின்னணியில் ஜெனரல் டெம்ப்ஸி இந்த கருத்தை தெரிவித்தார்.

சீனாவின் வளர்ந்து வரும் வலுவை கட்டுப்படுத்த இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன் கீழ் புதிய பலதரப்பு கூட்டணிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டன.

அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ‘இப்பகுதியில் ஒரு விரிவான ராணுவ நிலை வேண்டும்’ என பரிந்துரைத்தார்.

சீன எதிர்ப்பில் ஒற்றுமை?


அப்போதிலிருந்து சீனாவுக்கு எதிரான தனது ராணுவ கூட்டணிகளில், இந்தியா உட்பட ஆசியாவின் பல நாடுகளை அமெரிக்கா ஈடுபடுத்த முயற்சித்து வருகிறது.

இந்தியாவை மட்டுமே தனது கூட்டணியில் சேர்ப்பது, அமெரிக்காவின் முயற்சி என்று சொல்ல முடியாது. இந்த இயக்கத்தில் அதிகமான நாடுகளை இணைக்க அந்நாடு முயற்சி செய்து வருகிறது.

ஆனால், சீனாவைத் தடுக்க உதவும் மிக முக்கியமான நாடாக, இந்தியாவை வெள்ளை மாளிகை கருதுவது நிச்சயம்.

இந்தியாவிற்கும் மற்ற மூன்று நாடுகளுக்கும் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ ” சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, சுதந்திர நாடுகள் எவ்வாறு இணைந்து பணியாற்றமுடியும் என்ற விஷயம் எனது சந்திப்புக்களில் விவாதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன், “என்று குறிப்பிட்டார்.

இந்தியாவைத் தொடர்ந்து இலங்கை, மாலத்தீவுகள், இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்பது, அனைவருக்குமே தெரியும். இதைக் கருத்தில் கொண்டு, உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே , கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பதற்றம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் சாய்வு அமெரிக்காவை நோக்கி அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

administrator

Related Articles