விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிவிரைவான இணையதள சேவையை வழங்குவதற்காக, செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சுற்று வட்டப்பாதையில் நிறுத்தும் வர்த்தகம் செழிப்படைந்து வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.36 லட்சத்து 63 ஆயிரத்து 344 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடந்தது. வருகிற 2025-ம் ஆண்டில் இதன் மதிப்பு ரூ.49 லட்சத்து 17 ஆயிரத்து 240 கோடியாக வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
செயற்கைக்கோள்களை ஏவுவதில் முக்கிய பங்காற்றி வந்த நாடுகளாக ரஷியா மற்றும் சீனா இருந்து வந்தது. எனினும், உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் பதற்ற சூழல் ஆகியவற்றால் புதுப்புது வாடிக்கையாளர்களை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.