சோனு சூட்டுக்கு கிடைத்த கௌரவம்!!

சோனு சூட்டுக்கு கிடைத்த கௌரவம்!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு செய்த உதவிகள் மற்றும் சேவைகளை பாராட்டி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நடிகர் சோனு சூட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் அவர் நடித்த படங்களையும் கடந்து அவருடைய மனித நேயத்திற்காக பாராட்டப்படுபவர். கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த ஆண்டு பரவிய போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் காரணமாக பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். பலரும் சொந்த பந்தங்களை சந்திக்க முடியாமல் தவித்தனர், பசியில் வாடினர். துயரில் தவித்தவர்களுக்கு பலரும் உதவினாலும் அதில் மிக குறிப்பிடத்தகுந்த நபராக விளங்கியவர் நடிகர் சோனு சூட்.

ஊரடங்கின் போது வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். சிலரை தனி விமானத்திலும் அனுப்பி வைத்தார். ஸ்பெயினில் தவித்த இந்திய மாணவர்கள் ஊர் திரும்ப உதவி, விவசாயிக்கு டிராக்டர் என சோனு சூட் அளித்த உதவிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இடைவெளியே இல்லாமல் உதவிகளை செய்து வந்த சோனு சூட் துயரத்தில் தவிப்பவர்களுக்காக தனது சொத்துக்களையும் அடமானம் வைத்து உதவியது மனிதருள் மாணிக்கமாக அவரை மாற்றியது. ஒட்டுமொத்த தேச மக்களும் அவரை ஹீரோவாகவே பாவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் சோனு சூட் செய்த உதவிகளை பலரும் பாராட்டியிருந்தாலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒரு படி மேல் சென்று மிக உயரிய கௌரவத்தை அவருக்கு தந்துள்ளது.

விமானம் ஒன்றில் சோனு சூட்டின் படத்தை ஸ்டிக்கரிங் செய்து அதில் ‘ரட்சகர் சோனு சூட்டுக்கு ஒரு சல்யூட்’ என்ற வாக்கியத்தையும் பொறித்துள்ளது. கபாலி படம் ரிலீஸின் போது ரஜினிக்கு இதே போன்று கௌரவம் கிடைத்தது நினைவிருக்கலாம்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ட்விட்டரில் சோனு சூட்டுக்கு அளித்த கவுரவம் குறித்து வெளியிட்டிருந்த பதிவிற்கு பதிலளித்த சோனு சூட், “மோகாவில் இருந்து மும்பைக்கு முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்தது நினைவுக்கு வருகிறது. அனைவரின் அன்புக்கும் நன்றி. என்னுடைய பெற்றோர்களை அதிகம் மிஸ் செய்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

administrator

Related Articles