டெல்லியில் “வேளாண்”சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்!!

டெல்லியில் “வேளாண்”சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ’டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்கட்சிகள் திசை திருப்ப முயல்வதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மோதி, புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் தங்களுடைய வருவாயை பெருக்கிக் கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்பு என்று தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களில் அந்த சட்டங்களின் பலன்களை விவசாயிகள் காண்பார்கள் என்று அவர் கூறினார்.

கடன் தள்ளுபடி என்பது ஒரு வகை பித்தலாட்டம் என்று கூறிய மோதி, எதிர்கால நலன்கள் என்ற பெயரில் இல்லாத ஒன்றை கூறி விவசாயிகளை முந்தைய அரசுகள் ஏமாற்றி வந்ததாக தெரிவித்தார்.

சிறிய விவசாயியால் சந்தைக்குச் சென்று நேரடியாக தனது பொருட்களை விற்கக் கூடிய நிலை இல்லை என்றும், அந்த நிலைமையை மாற்றி அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க தற்போதைய வேளாண் சட்டங்கள் உதவியுள்ளன என்றும் மோதி குறிப்பிட்டார்.

இந்த நிலையில், “நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால் மட்டுமே மத்திய அரசுடன் பேசுவோம், இல்லையென்றால் போராட்டத்தை தொடருவோம்” என்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லிக்கு வரும் விவசாயிகளை வெளி மாநில எல்லைகளில் தடுக்கக் கூடாது, நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை போராட்டத்துக்காக டெல்லிக்கு கடும் குளிரை பொருட்படுத்தாமல் வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், உண்மைக்கு ஆதரவாக நீங்கள் இருக்கப் போகிறீர்களா, பொய்க்கு துணை நிற்கப்போகிறீர்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

administrator

Related Articles