தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையை முடக்கத் திட்டம்

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையை முடக்கத் திட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை இணைக்கும்  ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை -8 ஐ முடக்க விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதையடுத்து, ஹரியானா – டெல்லி எல்லையில் காவல்துறை அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், ஹரியானாஆகிய மாநிலங்களில் இருந்து எண்ணற்ற விவசாயிகள் டெல்லியை நோக்கி விவசாயிகள் அணிவகுப்பு செய்ய உள்ளதை அடுத்து, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துவருகிறது.

விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசுடன் மீண்டும்  பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்தனர். டெல்லி-ஹரியானா எல்லையில்  செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பஞ்சாப் மாநில  கிசான் சங்கர்ஷ் அமைப்பு தலைவர் கன்வல்பிரீத் சிங் பன்னு, ” அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு முன் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்… ,”என்று அவர் கூறினார்,

இதற்கிடையே, விவாசய ஆர்ப்பாட்டங்கள் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் மற்றும் தீவிர இடதுசாரிகளின் பிடியில்  விவசாயிகள் சிக்கியுள்ளனர் என்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாரதிய கிசான் அமைப்பு நிறுவனர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,”  அரசின் நடத்தும் தாக்குதளின் அழுத்தம் குறையவே இல்லை. அதன் சொல்லாடல் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும். “முதலில் அவர்கள் எங்களை கலிஸ்தானி என்று அடையாளப்படுத்தினார்கள், பின்னர் பாகிஸ்தான் என்று அழைத்தார்கள். இப்போது நாங்கள் நக்சல்கள் என்று அழைக்கப்படுகிறோம். மொழி மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அவர்கள் தான் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகின்றனர்,”என்று  தி சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஹரியானவைச் சேர்ந்த விவசாய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.  புதுடெல்லியில் நரேந்திர சிங் தோமரை அரியானாவைச் சேர்ந்த பாரதீய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குனி பிரகாஷ் தலைமையிலான பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.
அப்போது வேளாண் சட்டங்களால் தங்களுக்கு கிடைத்த பலன்களை விவசாயிகள் தன்னுடன் பகிர்ந்து கொண்டதாக நரேந்திர சிங் தோமர் கூறினார்.

மந்திரி சகாக்கள், ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா மற்றும் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் மற்ற விவசாய பிரதிநிதி தலைவர்களுடன் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

administrator

Related Articles