‘துமிந்தவையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிடுவது தவறு’ (Video)

‘துமிந்தவையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிடுவது தவறு’ (Video)

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்காக, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மனுவையும் கையளிப்போமா என்று கேட்டது தவறான செயல் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வதிவிடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


“ஓரிரு தினங்களுக்கு முன்னர், துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது.ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார்.

அந்த விடயம் வெளிவந்ததனால், சில நெருக்கடிகளும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோ கணேசன் கேட்டார்.

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்த காரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரீகத்தை அவர் பேணாவிட்டாலும், அதனை நான் பேண விரும்புகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் கூறியது. துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் கூறியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் கூறவில்லை. ஆனால் அது தவறான முன்மாதிரியாகிவிடும்.

தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம்.எ னவே, நிறைவேற்ற முடியாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடாகும்.

சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட, அப்படியானால், தமிழ் அரசியல்கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன்.இந்த இரண்டு விடயங்களையும் ஒன்று சேர்க்க கூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை செய்வது, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும்.

எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம்.தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள்” என்று எம்.ஏ.சுமந்திரன் தனது உரையின் போது தெரிவித்தார்.

administrator

Related Articles