தெலங்கானாவில் கால் பதித்தது பாஜக: ஹைதராபாத் தேர்தலில் அசத்தல் வெற்றி

தெலங்கானாவில் கால் பதித்தது பாஜக: ஹைதராபாத் தேர்தலில் அசத்தல் வெற்றி

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தெலங்கானாவில் பாஜக வலுவாகக் கால் பதித்துள்ளது. கடந்த முறை வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அந்தக் கட்சி தற்போது பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.

பாஜக எத்தனை இடங்களில் வென்றுவிடும் என்று பார்க்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி சவால் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்துவது அதிகரித்தது.

அசாசுதீன் ஒவைசியை நவீனகால முகமது அலி ஜின்னா என்று பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. சூர்யா விமர்சித்தார். அதுமட்டுமின்றி தென் மாநிலங்கள் முழுவதும் காவிமயமாகும் என அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல், மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. பாஜக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

ஹைதராபாத் தேர்தல் பிரச்சாரத்திற்கு இத்தனை தலைவர்களா, இன்னமும் ட்ரம்ப் மட்டும்தான் பாக்கி என ஒவைசி பாஜகவைக் கிண்டல் செய்தார்.

ஹைதராபாத்தில் நடந்தது ஒரு சாதாரண மாநகராட்சித் தேர்தல்தான். இதற்கு ஏன் தேசியக் கட்சியான பாஜக இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கும் மாநிலமாக தெலங்கானா இருக்கும் என பாஜக தலைமை கருதியது.

இதற்கேற்ப அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் டூபக் சட்டப்பேரவைத் தொகுதியை ஆளும் டிஆர்எஸ் கட்சியிடம் இருந்து பாஜக கைப்பற்றியது. இந்த மாற்றம் பாஜகவுக்குப் புதிய உத்வேகத்தைத் தந்தது.

ஹைதராபாத் மாநகராட்சியில் முத்திரை பதிக்க முடியும் என்ற உறுதி அக்கட்சிக்கு ஏற்பட்டது. ஹைதராபாத் தேர்தலைப் பெரும் சவாலாக எண்ணி பாஜக களமிறங்கியது.

இதுமட்டுமல்லாமல் தெலங்கானா மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் ஏறக்குறைய 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஹைதராபாத்தில் வசிக்கின்றனர். இதனால் இங்கு பெறும் வெற்றி, தெலங்கானா மாநிலத்தைக் கைப்பற்ற முன்னோட்டமாக அமையும் என பாஜக கணக்கிடுகிறது.

இதுமட்டுமின்றி அண்மையில் நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசியின் எழுச்சியும், அவர் 5 இடங்களைக் கைப்பற்றியதும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவைசி கட்சிக்கு எதிரான வாக்குகளைத் திரட்டுவதும், அதன் மூலம் காங்கிரஸை ஓரங்கட்டுவதும் பாஜகவுக்கு எளிதாகிறது. மத ரீதியில் வாக்குகளைத் திரட்டவும் வாய்ப்பாக அமைந்தது.

இதன் காரணமாகவே அமித் ஷா தொடங்கி பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் களமிறங்கினர். பாஜகவின் இந்த முயற்சி வெற்றி கொடுத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வழக்கமான தபால் வாக்குகளைத் தவிர தற்போது கொரோனா சூழல் என்பதால் வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.

தபால் வாக்குகளில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி இருந்தது. இந்த நிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. எஐஎம்ஐஎம் கட்சி 17 வார்டுகளில் முன்னிலை பெற்றிருந்தது.

இதன் பிறகு வழக்கமான வாக்குச்சீட்டுகள் மூலம் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் நிலவரம் மாறியது. ஆளும் டிஆர்எஸ் கட்சி முன்னிலை பெற்றது.

மொத்தமுள்ள 150 இடங்களில் 146 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிஆர்எஸ் 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்குத் தேவையான 75 இடங்களைப் பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பாஜக 45 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த முறை தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஏஐஎம்ஐஎம் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 44 இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 150 இடங்களில் 143 வார்டுகளுக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 வார்டுகளுக்கான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்பட வேண்டும்.

administrator

Related Articles