தொழில் சலுகைகளும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது – திகாம்பரம்

தொழில் சலுகைகளும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது – திகாம்பரம்

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என சிலர் மார்தட்டுகின்றனர். ஆனால் வேலை நாட்கள் குறைக்கப்படும் என தோட்டக் கம்பனிகள் அறிவித்து வருகின்றன. தொழில் சலுகைகளும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு யார் தீர்வை பெற்றுக்கொடுப்பது.” – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வு இன்று (14) அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் மகளிர் அணித் தலைவி சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார் எம்.பி. உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திகாம்பரம் எம்.பி., மேலும் கூறியதாவது,

” வேலை நேரம், வாக்குரிமை உட்பட தமக்கான உரிமைகளை பெண்கள் போராடியே வென்றெடுத்தனர். எனவே, பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல விடயங்களை முன்னிறுத்தி மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் நினைவுகூரப்படுகின்றது.   ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண்ணின் பங்களிப்பு நிச்சயம் இருக்கின்றது. எனவே, பெண்களுக்கான உரிய அங்கீகாரத்தை நாம் வழங்க வேண்டும்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அது தற்காலிக நியமனம் அல்ல. அப்பதவியில் அவரே நீடிப்பார். அதுமட்டுமல்ல உள்ளாட்சி மன்றங்களிலும் நாம் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளோம்.  உலகில் பல நாடுகளில் பெண்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர். சில நாடுகளை பெண்கள் ஆள்கின்றனர்.எமது பெண்களின் வாழ்வும் மேம்பட வேண்டும். அதற்காக நாம் குரல் கொடுப்போம். குறிப்பாக பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் சம்பளத்துக்காககூட போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுத்துவிட்டோம் என சிலர் கொக்கரிக்கின்றனர். ஆனால் 12 அல்லது 15 நாட்கள்தான் வேலை வழங்கப்படும் எனவும், தொழிலாளர்களுக்கான சலுகைகள் இல்லாமல்போகும் எனவும் கம்பனிகள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது? எமது மக்களுக்கு ஊழைப்புக்கேற்ப ஊதியம் வேண்டும். எனவே, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்.” – என்றார்.

administrator

Related Articles