நைல் நதி நீர்ப் பங்கீடு – டிரம்ப்பின் நாட்டாமையை ஏற்குமா ஆப்பிரிக்க நாடுகள்?

நைல் நதி நீர்ப் பங்கீடு – டிரம்ப்பின் நாட்டாமையை ஏற்குமா ஆப்பிரிக்க நாடுகள்?

உலகின் மிக நீளமான ஆறு நைல் நதி. உலகில் பண்டைய நாகரிகங்களின் தொட்டில் அது. அதனுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய ஆறான காவிரி, சிறு குழந்தையாக இருக்கலாம்.

ஆனால் இந்தியாவுக்குள் மாநிலங்களுக்கு இடையே ஆற்று நீர்ப் பகிர்வுச் சிக்கலைப் பார்த்த நம் நினைவுகளைக் கிளறுகிறது, நைல் நதியின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் நாடுகளுக்கு இடையில் முளைத்துள்ள சிக்கல்.

நாமறிந்த காலத்தில் உலகின் மிக மோசமான பஞ்சத்தையும், பட்டினியையும் பார்த்த ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா, தற்போது தங்கள் நாட்டில் நைல் நதியின் குறுக்கே மிகப் பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டியுள்ளது. இதில் அமைக்கப்படும் புனல் மின் திட்டம், ஆப்பிரிக்காவிலேயே மிகப் பெரியதாக இருக்கும்.

ஆனால் சிக்கல் என்னவென்றால், எத்தியோப்பியாவுக்குக் கீழே இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தும் எகிப்து, இதே ஆற்று நீரை நம்பியுள்ள சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த திட்டம் தண்ணீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் ஒரு சர்வதேச ஆற்றுநீர்ச் சிக்கல் முளைத்துள்ளது.

இந்தச் சிக்கலில் எகிப்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எத்தியோப்பியாவின் அணையைத் தகர்க்கும்படி கூறியுள்ளார்.

இது எத்தியோப்பியாவுக்கு எரிச்சலைத் தந்துள்ளது. எந்த விதமான ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று எத்தியோப்பியப் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த அணைக்கு, மகா எத்தியோப்பிய சீர்திருத்த அணை ( கிராண்ட் எத்தியோப்பியன் ரினைசன்ஸ் டேம்) என்று பெயர்.

இந்த அணையை வைத்துக் கொண்டு எகிப்தால் வாழ முடியாது. எனவே அந்தக் கட்டுமானத்தை எகிப்து தகர்க்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.

நைல் நதியை அலைக்கழிக்கும் ஆற்று நீர் சிக்கல் – அணையை உடைக்கச் சொன்ன டிரம்ப்
எனவே அமெரிக்கா இந்த பிரச்சனையில் எகிப்தின் பக்கம் சாய்வதாக கருதுகிறது எத்தியோப்பியா.

அது தவிர, ஜூலை மாதம் தொடங்கி புதிதாக கட்டிய இந்த அணையை எத்தியோப்பியா நிரப்பத் தொடங்கிய நிலையில், எத்தியோப்பியாவுக்கு தரும் சில உதவிகளை நிறுத்துவதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா அறிவித்தது.

டிரம்பின் சர்ச்சையான இந்த கருத்தைத் தொடர்ந்து எத்தியோப்பிய வெளியுறவு அமைச்சர், அந்நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதருக்கு அழைப்பானை அனுப்பி அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து விளக்கம் கேட்டார்.


அணையில் என்ன சர்ச்சை?
எகிப்து தங்கள் நாட்டின் தண்ணீர் தேவையில் பெரும் பங்கை நைல் நதியைக் கொண்டே தீர்த்துக் கொள்கிறது. இந்நிலையில் நைல் நதியின் ஓட்டத்தை எத்தியோப்பியா கட்டுப்படுத்துவதால் தங்கள் நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீர் அளவு குறையும், இதனால் பொருளாதாரம் பாதிக்கும் என்று எகிப்து கவலைப்படுகிறது.

400 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்படும் இந்த அணையின் பணிகள் முடிவடைந்தால், நீல நைல் ஆற்றின் குறுக்கே உருவாக்கப்படும் இந்த திட்டம், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய புனல் மின் திட்டமாக இருக்கும்.

எவ்வளவு விரைவாக இந்த அணையை எத்தியோப்பியா நிரப்புகிறதோ, அவ்வளவு விரைவாக எகிப்து மோசமாக பாதிக்கப்படும். மெதுவாக இந்த அணையை நிரப்புவது பாதிப்பை மட்டுப்படுத்தும் என்று கருதுகிறது எகிப்து.

2011ம் ஆண்டு இந்த அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்குவதாக அறிவித்தது எத்தியோப்பியா. தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அணை அவசியம் என்று தெரிவித்தது எத்தியோப்பியா. சிக்கலில் தொடர்புடைய எத்தியோப்பியா, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தலைமை வகித்தது. ஆனால், தற்போது இந்த மேற்பார்வைப் பாத்திரத்தை ஆப்பிரிக்க ஒன்றியம் ஏற்றுக்கொண்டுவிட்டது. (BBC)

administrator

Related Articles