பதுளை பெருந்தோட்ட மக்களுக்கு பாரபட்சமா?

பதுளை பெருந்தோட்ட மக்களுக்கு பாரபட்சமா?

பெருந்தோட்ட முகாமைத்துவத்தினருக்கும், தொழிலாளர்களுக்குமிடையிலும் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றினை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை, எமது பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்விடயத்தில், எத்தகைய பாகுபாடுகளோ பாரபட்சங்களோ இடம்பெறுவதில்லையென்று பதுளைப் பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வசந்த கந்தேவத்த குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிபர், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரிற்கு அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே, மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டிருக்கின்றார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், பதுளைப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதங்களில், பெருந்தோட்டங்களில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் குறித்த முறைப்பாடுகளில், தொழிலாளர் தரப்பில் நியாயங்கள் காணப்பட்டாலும், பாகுபாடுகள், பாரபட்சங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவென்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், தோட்ட முகாமைத்துவங்களுக்கு சாதகமாகவே, விசாரணை முடிவுகள் அமைகின்றன.

குறிப்பாக தோட்ட முகாமைத்துவங்களுக்கு எதிராக, தோட்டத் தொழிலாளர்களினால் செய்யப்படும் முறைப்பாடுகள், அநேகமாக பதுளைப் பகுதி பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென்றும் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இம்முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உயர்நிலை அதிகாரிகளினால் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பதுளை பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய அம்முறைப்பாட்டிற்கு பதிலளிக்கும் வகையிலேயே, பதுளைப் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அதிபர்,பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அக்கடிதத்தில்,’தாங்கள் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், பதுளைப் பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

பெருந்தோட்டங்களில் தோட்ட முகாமைத்துவத்தினருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே பல்வேறு முரண்பாடுகள், பிரச்சினைகள் குறித்து, எமது பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதியப்படுகின்றன. இரு தரப்பிலிருந்தும் இம் முறைபாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.

அம் முறைபாடுகள் பக்கச் சார்பின்றி விசாரணைகளை மேற்கொண்டு, தவறுகளை மேற்கொண்டவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்விடயத்தில் பாகுபாடுகள், பாரபட்சங்கள் எவ்வகையிலும் காட்டப்படுவதில்லை. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் எந்தவொரு முறைப்பாடும் அகற்றப்படுவதில்லை. அவையணைத்தும் பதியப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பதுளை, ஹாலி-எலை,பசறை,லுணுகலை, மடூல்சீமை ஆகிய பொலிஸ் நிலையங்களை மேற்பார்வை செய்யும் உதவிப் பொலிஸ் அதிபர்களிடம், மேற்படி விடயங்கள் குறித்து கூடிய கவனம் செழ த்தி இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து எனக்கு அறிக்கை கேட்டுள்ளேன். ஆனால்,எந்தவொரு இடத்திலும் பாகுபாடுகள், பாரபட்சங்கள் இடம்பெறவில்லையென்றும் அறிய முடிகின்றது.

இவ்வகையில், இரு தரப்பினரிடையே இடம்பெறும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை இரு தரப்பினரையும் வரவழைத்து இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளோம். ஏற்படுத்தியும் வருகின்றோம். இது விடயம் தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கும் கொண்டு வருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், தோட்டத்தில் வதியும் மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக முறைப்பாடுகளை செய்ய எத்தணிக்கும் போது, அவை பொலிஸ் நிலையங்களினால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதுதான் உண்மை நிலையாகும்.

நான் அறிந்த வகையில், தோட்ட நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் நிமித்தம் தோட்ட மக்களே இதுவரையிலும் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிருவாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கெதிராக தண்டனை வழங்கப்பட்டதாக பதிவுகள் இல்லை. இதுவே எனது முறைப்பாட்டிற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

எனவே, சிரேஸ்ட பொலிஸ் அதிபரின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவதற்கு தயாராக இல்லை. ஆனால் இப்போது இவ்விடயம் என்னால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையினர் தோட்ட வாழ் மக்களின் புகார்களை ஏற்றுக்கொண்டு எதிர்காலங்களிலாவது நடுநிலைமை வகிப்பரென எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

administrator

Related Articles