பா.இரஞ்சித் – ஆர்யா இணையும் ‘சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பா.இரஞ்சித் – ஆர்யா இணையும் ‘சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படத்துக்கு ‘சார்பட்டா பரம்பரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். இதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்துக்கு ‘சார்பட்டா பரம்பரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் ஆர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குநராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறியிருப்பதாவது:

“இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா”.

இவ்வாறு பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles