பா.ஜ.கவில் சேர்ந்தார் நடிகர் செந்தில்!!

பா.ஜ.கவில் சேர்ந்தார் நடிகர் செந்தில்!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் என்ற கிராமத்தில் 1951-ம் ஆண்டு பிறந்த நடிகர் செந்தில் தனது 13-வது வயதில் சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்து கொண்டு நாடகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பின்னர் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த செந்தில் 80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்

கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென ரசிகர் கூட்டம் உருவாகி அது இன்று வரை தொடர்கிறது. கரகாட்டக்காரன் படத்தில் இக்கூட்டணி செய்த வாழைப்பழ காமெடிக்கு சிரிக்காத ஆளில்லை என்று சொல்லலாம். 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் செந்தில் முதல்முறையாக ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ பட இயக்குநர் சங்கையா இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்

நடிப்பு மட்டுமல்லாது அரசியலில் தன்னை இணைத்துக் கொண்ட செந்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்த செந்தில் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் செந்தில், “ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன். 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் தனக்கு உரிய இடம் கிடைத்தது.

அவரது மறைவைத் தொடர்ந்து தற்போது நல்ல கட்சியில் இணைய வேண்டும் என்கிற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறேன். இனி பாஜக நல்ல முறையில் வளரும். மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்

administrator

Related Articles