பிரிட்டனில் இருந்து சென்னை சென்ற இளைஞருக்கு புதிய வைரஸ்?- சளி மாதிரி புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

பிரிட்டனில் இருந்து சென்னை சென்ற இளைஞருக்கு புதிய வைரஸ்?- சளி மாதிரி புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

பிரிட்டனில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சென்னை கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிய வைரஸா? என்பதைக் கண்டறிய இளைஞரின் சளி மாதிரி, புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. ஏற்கெனவே பரவிய வைரஸை விட அதிக வீரியமிக்கதாக உருமாறி70 சதவீதம் வேகமாக புதிய வைரஸ்பரவி வருவதால் பல்வேறு தடுப்புநடவடிக்கைகளை அந்நாட்டு அரசுஎடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் இடையிலான விமான சேவையை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், சென்னை விமான நிலையம் பன்னாட்டு முனையத்தில் செயல்படும் பரிசோதனை மையத்தை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, பிரிட்டனில் இருந்து எந்த நாட்டின் வழியாகவும் சென்னை வருபவர்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மருத்துவக் குழுவுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

1,078 பேர் பயணிகள்

பிரிட்டனில் பரவி வரும் புதியவகை கரோனா வைரஸ் குறித்து மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். அந்த புதிய வைரஸ் குறித்ததகவல் முழுமையாக கிடைக்கவில்லை. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படும். கடந்த 10 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த 1,078 பேரை கண்டறிந்து கண்காணித்து வருகிறோம்.

அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 15 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில்,இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

அவர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் நலமுடன் உள்ளார். அந்த நபரின் சளி மாதிரி புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்தால் தான் பழைய வைரஸா அல்லது புதிய வைரஸா என்பது தெரியவரும்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகள் வழியாக தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த சில தினங்களாக பிரிட்டனில் இருந்து வந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானாலும், அவரது குடும்பத்தினர் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் தேவையற்ற வதந்திகள்,பீதிகளை நம்ப வேண்டாம். ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 83 சதவீத பரிசோதனை அரசு ஆய்வகங்களில் செய்யப்படுகிறது.

கண்காணிப்பு தீவிரம்

தனியார் ஆய்வகங்களில் அதிக கட்டணம் குறித்த புகார்கள் மீது விசாரணை நடக்கிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் எல்லா மாவட்ட ஆட்சியர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பிரிட்டனில் இருந்து விமானங்கள் வராது. ஆனாலும், அங்கிருந்து பயணிகள் வேறு நகரங்கள் முலம் வருகிறார்களா என கண்காணிக்கப்படுகிறது. பெங்களூரு – தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பிரியாராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

administrator

Related Articles