புதிய அரசியலமைப்புத் தொடர்பாக அமைச்சர் டக்ளஸின் நிலைப்பாடு என்ன?

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக அமைச்சர் டக்ளஸின் நிலைப்பாடு என்ன?


இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,அரசியலமைப்பில் இருக்கின்ற மாகாண சபையை முழுமையாக செயற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் வைரவப் பெரிய குளம் பிரதேசத்தில் ஈ.பி.டி.பி.இன் பங்களிப்புடன் குடியேறிய மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்று(20.12.2020) குறித்த பிதேசத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஊடகவியலாளர்களினால் புதிய அரசியலமைப்பிற்கான முன்மொழிவுகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே குறித்த கருத்தினை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எவ்வாறெனினும், புதிய அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஈ.பி.டி.பி. கட்சியின் எதிர்பார்ப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதன எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்றவர்களினால், அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் முயற்சிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்,

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக கிடைத்த மாகாண சபை முறையினை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் குழப்பியடித்தவர்களும் காலத்தை வீணடித்தவர்களுமே முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதன்போது, மாகாணசபைக்கு அதிகாரங்கள் போதியளவில் வழங்கப்படவில்லை என்ற கருத்து சிலரினால் முன்வைக்கப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லையென்றால், எதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் நீக்கப் போவதாக அலறுகின்றார்கள்? எனவும் பதில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், யார் எவ்வாறான கருத்துக்களை வெளியிட்டாலும், மாகாண சபைக்கு தற்போதைய அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்கள்தான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான ஆரம்பம் என்பதில் மாற்றம் இல்லை எனவும் உறுதியாகத் தெரிவித்தார்.

administrator

Related Articles