புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதைகள்.. இவை எவற்றோடு இணைக்கப்படுகிறது தெரியுமா?

புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதைகள்.. இவை எவற்றோடு இணைக்கப்படுகிறது தெரியுமா?

பிரதமர், குடியரசு துணைத்தலைவர் இல்லங்களை நாடாளுமன்ற கட்டடத்தோடு இணைக்கும் வகையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன

சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்” என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த வளாகத்தில் பிரதமர் மற்றும் குடியரசு துணைத்தலைவரின் இல்லங்கள், எம்.பி.க்களின் அறைகளை, நாடாளுமன்றக் கட்டடத்தோடு இணைக்கும் வகையில் மூன்று சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரின் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் தெற்கு பிளாக் பகுதியில் வரவிருக்கிறது.

மேலும் குடியரசு துணைத்தலைவரின் இல்லம் வடக்கு பிளாக் பகுதியில் இருக்கும் எனவும், தற்போது இருக்கும் போக்குவரத்து மற்றும் ஷ்ரம் சக்தி பவன்கள் இருக்கும் இடத்தில் எம்.பி.க்களின் அறைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பிரதமர், குடியரசு துணைத்தலைவரின் இல்லங்கள் மற்றும் எம்.பி.க்கள் அறைகள் ஆகிய மூன்று இடங்களில் இருந்தும், நேரடியாக புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு செல்லும் வகையில் சுரங்கப்பாதைகள் செயல்படவுள்ளன. மூன்று சுரங்கப்பாதைகளும் ஒற்றை வழியாக மட்டுமே இயங்கும் எனவும், அவை குறிப்பிட்ட நபர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், இதில் பயணிப்பதற்கு கோல்ஃப் மைதானங்களில் பயன்படுத்தப்படும் சிறிய வாகனங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பை உறுதிபடுத்தவும், முக்கிய பிரமுகர்கள் பயணத்தின்போது தேவையில்லாமல் ஏற்படும் இடையூறுகளை களையவும் இந்த சுரங்கம் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. குடியரசு தினம், சுதந்திர தின விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தும் வழியைப் விவிஐபிக்கள் பயன்படுத்தவும், மற்ற நாட்களில் சுரங்க வழியையும் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்துக்கு குடியரசுத் தலைவர் அடிக்கடி வரவேண்டிய அவசியம் இல்லாததால், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. சென்ட்ரல் விஸ்டா அவென்யூ நார்த் மற்றும் சவுத் பிளாக்கிலிருந்து இந்தியா கேட் வரை நீள்கிறது. அதில் ராஜ்பாத், அதன் அருகிலுள்ள புல்வெளிகள், கால்வாய்கள், மரங்களின் வரிசைகள், விஜய் சவுக் மற்றும் இந்தியா கேட் பிளாசா ஆகியவற்றை உள்ளடக்கி, மூன்று கிலோமீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

administrator

Related Articles