“மலையக மாணவர்கள் கல்வியை கைவிடகூடாது “

“மலையக மாணவர்கள் கல்வியை கைவிடகூடாது “

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்ட தொண்டமான் குடும்பத்தாருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்  என திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல  தெரிவித்தார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் இன்று (14) இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிள்ளைகளின் வாழ்வு மேம்படவேண்டும் என்ற நோக்கில் சிரேஷ்ட தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் தொண்டமான் குடும்பத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்டனர். இதற்காகவே தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கினர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தற்போது சரியான வழியை தெரிவுசெய்துள்ளார். கல்வி துறை மேம்படாவிட்டால் சமூகம் மேம்படாது. எனவே, கல்வியை ஒதுக்கிவிட்டு அபிவிருத்திகள் செய்தால் அவை பயன்தராது. அந்தவகையில் கல்வி மேம்பாட்டுக்காக ஜீவன் செயற்படுவது சிறப்பு.  கல்வி கற்றால அதன்மூலம் கிடைக்கும் அறிவை எவராலும் களவாட முடியாது. கல்வியால் சாதிக்க முடியும். எனவே, கல்வி திட்டங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் முன்வைக்கும் யோசனைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதேவேளை, தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார வதிகள் தொடர்பிலும் ஜீவன் தொண்டமான் கவனம் செலுத்துவார் என நம்புகின்றோம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்பட்டுவிட்டால் எவருக்கும் அடிபணியவேண்டிய நிலை ஏற்படாது.

மாணவர்களும் கல்வியை இடைநடுவில் கைவிடாது, பயிற்சி நிறைவுபெறும்வரை கற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொழில் வாய்ப்புகள் கிடைத்தால் இப்பகுதி பிள்ளைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.” என்றார்.

administrator

Related Articles