மல்லிகைப்பூ சந்தியில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கும் அரவிந்தகுமார்

மல்லிகைப்பூ சந்தியில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கும் அரவிந்தகுமார்

ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் போராட்டம் நடாத்த நேரிடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிர்வாகிகளின் அடாவடிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு அடி பணியத் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஹட்டன் மல்லிகைப் பூ சந்தி’ என்பது தொழிலாளர்களுக்கான வரலாற்றுப்பதிவு பிரதேசமாகும். தொழிலாளர்களுக்கான நியாயப்பூர்வமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அத் தொழிலாளர்களினால் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடமாகும். அத்தகைய இடத்தில் தோட்ட நிருவாகிகள் இணைந்து போராட்டமொன்றை நடாத்தியிருக்கின்றனனர். தொழிலாளர்களுக்கெதிராகவே இப் போராட்டம்  அமைந்துள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள், தோட்ட நிருவாகிகள் மத்தியில் பிணக்குகள் ஏற்படுவது சகஜமாகும். இப் பிணக்குகளை தோட்ட மட்டத்தில் நிவர்த்தி செய்ய, தோட்டமட்டத்தலைவர்கள் சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் முயற்சிப்பர். அம் முயற்சி பயனளிக்காதபட்சத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடுகள் இடம்பெறும். இத் தலையீடுகளிலும் பயன் கிடைக்காதுவிட்டால்,உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகம், தொழில் மன்று ஊடாகவே பிரச்சினைகள், பிணக்குகள் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறான முறைகளின் அடிப்படையிலேயே முன்னெடுப்புக்கள் இடம்பெறும்.

அட்டன் சாமிமலை  ஒல்டன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தோட்ட நிருவாகிகள் இருவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டு, பத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அத் தோட்டப்பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி கடந்த பெப்ரவரி மாதம்  5ந் திகதி மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பின் போது, தோட்ட நிருவாகங்கள்  மேற்கொண்ட எதேச்சதிகார செயல்பாடுகளையடுத்தே, பிரச்சினை ஏற்பட வழி கோலியது. தோட்டத் தொழிலாளர்களது நியாயப்பூர்வமான போராட்டத்தை, தோட்ட நிருவாகங்கள் கொச்சைப்படுத்தி, உதாசீனம் செய்தமையே, ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமாகும்.

ஹட்டன் – மல்லிகைப் பூ  சந்தியென்பது,  தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுப் பதிவு பிரதேசமாகும். அம் மல்லிகைப் பூ சந்தியில் தோட்ட நிருவாகிகள் இணைந்து போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தோட்ட நிருவாகிகளின் இச் செயல்பாடானது, மேலுமொரு வரலாற்றுப் பதிவாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.

தோட்ட நிருவாகிகள் ‘மல்லிகைப் பூ சந்தியில்’ இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போதாவது, தோட்ட தொழிலாளர்கள் எந்த அளவிற்கு மன உளைச்சல், விரக்தி, வேதனை, துன்பம் போன்ற அவலங்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது புரிந்திருக்கும்.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மனிதாபமானத்துடன் அணுகப்படல் வேண்டும். அவர்களது தொழில்சார் உரிமைகள் மீறப்படாத வகையில், செயல்பாடுகள் அமைவது முக்கியமானதாகும்.

இவைகள் தோட்ட நிருவாகங்கள் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதற்கமைவாக தோட்ட நிருவாகங்கள் செயல்படுவார்களேயானால், தோட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்களே இல்லை. ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதற்கமைய தற்போது தோட்ட நிருவாகங்கள் செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles