மியன்மார் இரானுவ ஆட்சியோடு உறவு வைக்காதே! மட்டக்களப்பில் எழுச்சி போராட்டம்!!

மியன்மார் இரானுவ ஆட்சியோடு உறவு வைக்காதே! மட்டக்களப்பில் எழுச்சி போராட்டம்!!

(டினேஸ், எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வடக்கு கிழக்க ஒருங்கிணைப்புக் குழவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து கவனயீர்பு ஆர்பாட்டமொன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

இக் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் தொடர்பிலான ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டதுடன், இது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர்களுக்கு இவ்வறிக்கை சமர்ப்பிதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு இவ்வறிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதன் போது மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியுடன் கொண்டுள்ள அனைத்துவிதமான உறவுகளையும் பரிமாற்றங்களையும் நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோருகிறோம். மனித உரிமைகளை மீறுவதில் மிகவும் அபகீர்த்திக்குள்ளான அரசுகளில் ஒன்றாக ஆசியாவிலும் உலக அளவிலும்; மியன்மார் அரசு உருவாகியுள்ளது. 

2021 மாசி மாதம் 1ம் திகதி, மூத்த இராணுவ ஜெனரல் மின் ஆங் லாயிங் மற்றும் அவரின் இராணுவம் மியன்மாரில் ஜனநாயகமாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய ஜனநாயக லீக் தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கைப்பற்றியதோடு, மக்களின் தலைவர்களான திருமதி. ஆங் சாங் சூகி, நாட்டின் ஜனாதிபதி திரு வின் மையின்ட் அடங்கலான பல தலைவர்களையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்தனர். நாட்டின் தலைநகரான யங்கூன் மின்சார வெட்டால் இருளில் மூழ்கடிக்கப்பட்டதோடு நாடு முழுதும் வலைத் தொடர்புகள் முடக்கப்பட்டன.

மக்கள் வீதிகளில் இறங்கி தமது தலைவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம் செய்ததோடு தமது ஜனநாயக உரிமைகளுக்காக ரோஹிங்ஜா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சார்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள மியன்மார், இராணுவம் அமைதியாக போராடியவர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. இதுவரையில் 120க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன் பலர் காயப்பட்டுள்ளனர்.

இளம் பெண்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் காயப்பட்டுமுள்ளனர். படுகொலைக்குள்ளானோரில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் குறைந்தவர்களாகும். 2000 இற்கும் மேற்பட்டோர் ஏதேச்சாதிகாரமாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்களும் அடங்குவர். காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமது குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவோ சட்டத்தரணிகளை அணுகவோ அனுமதிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என பல குடும்பத்தினருக்குத் தெரியாது. போராட்டக்காரர்களுக்கும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எதிராக இராணுவம் சித்திரவதைகளையும் அட்டூழியங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஜ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றரர்ஸ் அவர்கள், மியன்மாரில் நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்துள்ளதோடு சிவில் ஆட்சி முறைமைக்கு திரும்புமாறு கோரியுள்ளார்.

மியன்மாருக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தோமஸ் அன்ருஸ் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது, மியன்மார் நாடானது ஒரு கொலைகார, சட்டபூர்வமற்ற ஆட்சியினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தடைகளைப் பிறப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.

ஜ.நா. பாதுகாப்புச் சபையானது தனது தலைமைத்துவ அறிக்கையில், மியன்மாரின் வீழ்ச்சியுறும் நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசணைகளை வெளிப்படுத்தியிருப்;பதோடு, அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகளை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் ஜனநாயகத்துக்கு திரும்புமாறு கோரியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நால்வர் அணி நாடுகள், தாம் மியன்மாரில் ஜனநாயகத்தை மீள ஸ்தாபிக்க கூட்டாக செயற்படுவதாக பிரகடணப்படுத்தியுள்ளதாக வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மியன்மார் இராணுவ சதிக்குப் பொறுப்பான பத்துப் பேருக்கு எதிராக அமெரிக்கா தடைகளைப் பிறப்பித்துள்ளது. இதில் இராணுவத்துக்கு நெருக்கமான மூன்று கம்பனிகளும் அடங்கும். ஐக்கிய இராச்சியம் மூன்று ஜெனரல்களுக்கு எதிராக தடைகளைப் பிறப்பித்துள்ளது.

மியன்மாரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதை தான் கவனத்திற்கெடுத்துள்ளதாகவும், அந்த நாட்டுக்கான இராணுவ – தொழில்நுட்ப உதவிகளை நிறுத்துவதற்கு யோசிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மியன்மார் இராணுவ சதியைக் கண்டித்து தென்கொரியா பாராளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருப்பதோடு, ஜனநாயகத்துக்குத் திரும்புமாறும் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும் உலகின் ஜனநாயக நாடுகளும் மியன்மார் இராணுவ ஜுன்டா தலைமையின் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன், சிவில் ஆட்சிக்கு திரும்புமாறு கோரிவருகின்றன.

இலங்கையின் சிவில் அமைப்பினரும், பொதுமக்களுமான நாம் ஐ.நா.வுடனும் உலகின் ஜனநாயக நாடுகளுடனும் கூட்டிணைந்து மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும், மியன்மாரின் கொலைகார, சட்டபூர்வமற்ற இராணுவ ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறோம்;:

மியன்மாரில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. பொதுச்சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் பரிந்துரை செய்யுமாறு நாம் இலங்கை அரசைக் கோருகிறோம்

சார்க் நாடுகளையும் மக்களையும் மியன்மார் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்குமாறும் இராணுவ ஜுன்டா ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் நாம் வலிந்துரைக்கிறோம்

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்து இறங்கி ஜனநாயகமாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும் மற்றும் மதச் சிறுபான்மையினரின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும், மியன்மாரில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் வேண்டுமென நாம் ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் கோருகிறோம்.

என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

administrator

Related Articles