யாழ் பல்கலை வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் கைது! விடுதலை செய்யுமாறு அங்கஜன், துணை வேந்தர் கோரிக்கை

யாழ் பல்கலை வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் கைது! விடுதலை செய்யுமாறு அங்கஜன், துணை வேந்தர் கோரிக்கை

யாழ்பல்கலைக்கழக மாணவன் விடுதலை (இணைப்பு)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் பொலிஸாரால் கைது (OLD NEWS)

திருக்கார்திகைக்காக யாழ். பல்கலைக்கழக வாயியில் தீபமேற்றிய சமயத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மாணவன் எம்.தர்ஷிகனை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார்.

அதேவேளையில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் இவ்விடயத்தில் தலையிட்டு மாணவனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

இன்று நடைபெற்றது தமிழ் மக்களுடைய ஒரு கலாசார நிகழ்வு என்பதை அங்கஜன் விளக்கியதையடுத்து, அதனை ஏற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட மாணவனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதேவேளையில், மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, கோப்பாய் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்ட துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, மாணவனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்.

எனினும், பொலிஸ் சம்பிரதாயங்களை முடித்த பின்னர் மாணவனை விடுதலை செய்வதற்குக் கோப்பாய் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலில் வழமை போன்று கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர். அதனையும் மீறி இன்று மாலை பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் எச்சரித்திருந்தனர். இந்த பின்னணியிலேயே மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles