ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார்: தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார்: தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், கோவையில் தேர்தல் பணிகளை துவக்க தயாராக இருப்பதாகவும் கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜினிகாந்த் அரசியலுக்கு இப்போது வருவார்… அப்போது வருவார் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்து கிடந்த நிலையில், 2017ஆம் ஆண்டு டிசம்பரில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது உரையாற்றிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும்போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றத்தின் பெயர், ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டது. ஓரிருமுறை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினி, தற்போது வரை கட்சி தொடங்கவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் அரசியல் கட்சி குறித்து ரஜினி எழுதியது போன்ற ஒரு அறிக்கை சமூகவலைதளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது.

அதில், ‘கொரோனா காரணமாக தொற்று எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம் என்றும், எனவே மக்களை தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும், ரஜினி பெயரில் வெளியான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கை குறித்து விளக்கமளித்த ரஜினி, ‘அந்த அறிக்கை என்னுடையது அல்ல. ஆனால், அதில் உள்ள தகவல் உண்மை’ என்று விளக்கமளித்தார். அதனையடுத்து, அவர் கட்சி தொடங்குவாரா? என்பது கேள்விக்குறியானது.

இந்தநிலையில், ரஜினிகாந்த் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதையொட்டி கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் அம்மன்ற நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தல், நாளை கட்சி ஆரம்பிப்பார் என்ற நல்ல செய்தி வரும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் கட்சிகள் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருவதாகவும், கண்டிப்பாக அரசியல் கட்சி துவக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் கட்சி துவங்கினால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணி செய்ய ரசிகர்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

administrator

Related Articles