“ரிவரஸ்” போதை மாத்திரையே மஹர சிறைச்சாலை குழப்பதற்கு காரணம்- விமல்

“ரிவரஸ்”  போதை மாத்திரையே மஹர சிறைச்சாலை குழப்பதற்கு காரணம்- விமல்

மஹர சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுவதற்கு கைதிகள் மத்தியில் வழங்கப்பட்ட “ரிவரஸ்” போதைமாத்திரையே காரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


மஹர சிறைச்சாiலியல் இடநெருக்கடி காரணமாக கலவரம் வெடிக்கவில்லை மாறாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சிலரே இதற்கு காரணம் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சதுர என்ற குற்றவாளி சரத என்ற போதைப்பொருளை வெலிக்கடைசிறையில் உள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக சில நாட்களிற்கு முன்னர் வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச குறிப்பிட்ட போதைப்பொருளை பயன்படுத்திய வெலிக்கடை கைதிகள் கொலை செய்யுமளவிற்கு பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறைச்சாலை புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் வெலிக்கடைசிறைக்குள் அந்த போதைப்பொருள் மேலும் செல்வதை தடுத்து விட்டனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனினும் மஹர சிறையில் அந்த போதைமாத்திரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தங்களுடைய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத குழுவினர் சிறைக்குள் திட்டமிட்ட கொலைகள் இடம்பெறுவதாக காண்பிப்பதற்காக மரணங்களை உருவாக்க முயன்றுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2012 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் இடம்பெற்ற அதேசூழல் தற்போதும் இலங்கையில் காணப்படுகின்றது என்பதை காண்பித்து ஜனாதிபதிக்கு அவப்பெயரை உருவாக்குவதும இந்த கலகத்தின் நோக்கம் எனவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் மேலும் 58 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.

administrator

Related Articles