விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு; 13 பேர் காயம்

விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு; 13 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, கடந்த 13-ம் தேதி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில் சிவகாசியில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கம்போல் இன்றும் இந்த பட்டாசு ஆலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.

இதனால் அடுத்தடுத்து இருந்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மேலும் 13 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைஅணைத்தனர். முதல்கட்டமாக பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

administrator

Related Articles