அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.

அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று (25) முதல் ஒரு வாரக்காலத்துக்கு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று திறந்து வைக்கப்பட்டது.

இதனை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் அம்மையார் மற்றும் கண்டியைச் சேர்ந்த இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் கலாநிதி. எஸ்.ஆதிரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பும், கௌரவிப்பும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ் மற்றும் திருமதி.அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பிலிப்குமார், பிரதம சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கா.மாரிமுத்து, நிர்வாகச் செயலாளர், உப தலைவரும், சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநர் எஸ்.ராஜமணி, போசகர் பி.சிவராஜா, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், இலங்கை – இந்திய சமூதாய பேரவையின் தலைவர் சிவராமன், பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ், இ.தொ.காவின் உப தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாளை (26) சௌமியபவனிலும், இ.தொ.கா.வின் பிரதேச காரியாலயங்களிலும் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை (29) அமரர்.ஆறுமுகன் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக முத்திரை வெளியீடு இடம்பெறவுள்ளதோடு, அன்றைய தினம் கொட்டகலையிலும் ஞாபகார்த்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *