அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஆனால் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் வகிபாகமே சிறந்த சான்று என CWC  பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (29) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், கிராம, சமூர்த்தி, நலன்புரி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புதிய பிரதேச செயலகங்களை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“ஒரு வருடத்துக்கு முன்னர், உப செயலகத்தை திறந்து வைத்தபோது, அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பிரதேச செயலகம் கோரும் நிலையில், உப செயலகம் எதற்கு எனவும் கேள்விகள் எழுப்பட்டன.

அப்போது பிரதேச செலயகம் நிச்சயம் உருவாகும் என நாம் பதிலளித்தோம். அதனை இன்று செய்து முடித்துள்ளோம். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், சொல்வதை செய்வதும்தான் காங்கிரஸின் அரசியல் பலம்.

இராஜங்க அமைச்சு பதவி எமக்கு கிடைத்தபோது, ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு காங்கிரஸ் பலவீனமடைந்துவிட்டது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாம் அமைதி காத்தோம். மறைந்த தலைவர் காட்டிய வழியில் நடந்தோம்.

எமது தவிசாளர் தேசிய சபையில் உள்ளார். தலைவர் கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கின்றார். நான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சு பதவியை வகிக்கின்றேன். ஆக இருந்ததைவிடவும் காங்கிரஸ் பலமாகவே உள்ளது.

எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றி வருவோம். அடுத்ததாக பல்கலைக்கழக விவகாரத்தையும் செய்து முடிப்போம்.” – என்றார்.

ஊடக செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *