போராட்டத்தில் உயிர் நீத்த போராளியின் உயிருக்கு பதில் கூற வேண்டியதும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேணடியதும் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியுமே அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கினார்கள். இன்று காவல் துறையை வைத்து தாக்குகின்றார்கள்.

இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா? என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (27) உயிரிழந்த போராட்டக்காரரின் குடும்பத்தாருக்கு மலையக மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று இந்த நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா?அல்லது அராஜக அரசியலா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த நிலைமை தொடருமானால் சர்வதேச ரீதியில் எமக்கு உதவி செய்ய காத்திருக்கின்ற நாடுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அந்த உதவிகளை செய்வதில் பின்வாங்கலாம். எனவே அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை காவல்துறையினரை கொண்டு அடக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி இன்று பொறுப்பற்ற விதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்.தேர்தலை ஒரு விளையாட்டாக கருதுகின்றார். அது மக்களின் ஜனநாயக உரிமை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் மிக விரைவில் நாம் மலையக மக்களை ஒன்று திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஜனநாயக போராட்டம் ஒன்றை தலைநகரில் முன்னெடுப்போம். மக்களை தூண்டிவிட்டு அரசியல் செய்ய நினைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஜனநாயக நாடு ஒன்றில் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இதனை யாராலும் தடுக்க முடியாது.

அன்று ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கியதால் கோட்டாபாய ராஜபக்ச தனது பதவியைவிட்டு ஒடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதே போல இந்த அரசாங்கமும் செயற்படுவதற்கு முற்பட்டால் ஜனாதிபதி ரணிலுக்கும் அதே நிலைமை ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *