இலங்கைக்கு நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, சீன அமைச்சர் வேங் டொங்வேயும் (Wang Dongwei), இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இலங்கைக்கான ஒத்துழைப்பை சீனா மீள உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, சீன அமைச்சர் வேங் டொங்வேய் உடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடன் சுமை, பொருளாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பில் தீர்வினை எட்டுவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கான ஆதரவை சீனா இதன்போது உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொள்கைகள், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் இணைந்து செயற்படுவதற்கான அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகியவற்றின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு விரைவான கடன் தீர்வு அவசியம் என, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு கடன் வழங்குநர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.