எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியப்போகிறது.

எனவே இவ்விடயத்தில் நாட்டு மக்கள் தெளிவடைய வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோக நிகழ்வானது கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தஇ கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஹீ ஷேன் ஹொங் ஆகியோரின் தலைமையில் கல்வி அமைச்சின் சப்புகஸ்கந்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இடம் பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள 10இ146 பாடசாலைகளில் சுமார் 40 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கென ஒரு கோடியே 26 இலட்சத்து 96 ஆயிரம் மீட்டர் சீருடை துணிகள் தயார் படுத்தி விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதில் 88 இலட்சத்து 63 ஆயிரம் மீட்டர் சீருடை துணியை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. இதன் பெருமதியானது 787.6 கோடி ரூபா ஆகும்.

சீன அரசாங்கமானது இலங்கையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 70% சீருடையை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மிகுதி 30 வீதமான சீருடைத் துணியை கல்வி அமைச்சு வழங்குகிறது. அதன் பெருமதியானது 236.2கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் சமூக பொருளாதார ரீதியில் நம் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.

சர்வதேச நாடுகளினதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் அனுசரணைகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

அரசாங்கமானது எப்போதும் நாடு, மக்கள் மற்றும் எதிர்காலம் என்ற சிந்தனையில் செயல்படுகிறது. ஆனாலும் எதிர்த் தரப்பினரின் ஆரோக்கியமற்ற முன்னெடுப்புகள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டையாக அமைகின்றன.

எதிர்க் கட்சியினரின் ஆரோக்கியமான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை மறுக்கவில்லை. அதேநேரம் அரசாங்கமானது தனது கடமைப் பொறுப்பிலிருந்து விலகிச் சென்று விடவில்லை என்பதையும் இங்கு கூறி வைக்க வேண்டும். தற்போது நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய கஷ்டங்களையும் இடையூறுகளையும் அனுபவித்து வருகின்றனர்.

இத்தகைய இடையூறுகளையும் கஷ்டங்களையும் களைவதற்கு பொருளாதாரத்தின் தன்மையை சீரமைத்து ஒருநிலைப் படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. யார் எதனைக் கூறினாலும் நம் நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்படும் பட்சத்திலேயே மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இலவச சேவைகளையும் ஏனைய கட்டண சேவைகளையும் செம்மைப்படுத்த முடியும். அதேபோன்று அபிவிருத்திகளையும் எதிர்பார்க்க முடியும்.
அரசாங்கம் இவ்வாறு சிந்தித்து செயல்படுகின்ற இத் தருணத்தில் நாட்டை தொடர்ச்சியாக கொதிநிலையில் வைத்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டி செயல்பட்டால் நாடு பாரிய ஆபத்தையே எதிர்கொள்ளும்.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தினதும் நிலை உணர்ந்து எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை பரிசீலனை செய்ய வேண்டும். நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்பதையே அரசாங்கம் விரும்புகிறது என்றார்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும் தரப்பிற்கு எந்தளவு மக்களின் நலன் மீது அக்கறை இருக்கின்றதோ அதற்கு நிகரான அக்கறை எதிர்க்கட்சியினருக்கும் இருத்தல் அவசியமாகும்.

ஒரு இக்கட்டான நிலையில் நாடு சிக்கியிருக்கும் போது, அரசாங்கத்திற்கு தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மேற்கொள்வதே எதிர்கட்சியினரின் தார்மீக கடமையும் பொறுப்புமாகும்.

அதனைவிடுத்து ஆட்சியை எம்மிடம் கையளியுங்கள் நாட்டை நல்வழியில் கொண்டு செல்லுகின்றோம் என்ற வாதம் வெறுமனே தமது சுயநலத்தின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள தற்போதைய பிரச்சினையை மாயாஜாலங்கள் ஊடாக மாற்றி விட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீள கட்டியெழுப்புவதில் பகிரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அவருக்கு ஆதரவளித்து அவர்களின் கரங்களை பலப்படுத்துவதே இன்றைய தேவையாக இருக்கின்றது. அதனை விடுத்து அவரின் காலைவாரி விடுவது நாட்டை மேலும் சீரழிப்பதற்கே வித்திடும். மக்கள் இதனை புரிந்து கொண்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *