அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்! – என்ன நடந்தது?
கணேசன், காவலர் சீருடையில் அண்ணாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அண்ணாமலையின் சமூக வலைதளப் பக்கத்திலும் பகிரப்பட்டது
‘ என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டுவருகிறார். கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருகைதந்த அண்ணாமலை, கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர், கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை ஊட்டிக்கு வருகைதந்த அண்ணாமலை, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து ஏ.டி.சி நோக்கி தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் நடைப்பயணம் மேற்கொண்டார்
ஊட்டி காஃபி ஹவுஸ் சர்க்கிள் பகுதியில் பணியிலிருந்த ‘ஹில் காப்’ காவலர் (மலை மாவட்டத்தில் போக்குவரத்தைச் சீரமைக்கவும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவவும், தமிழ்நாடு காவல்துறையால் கொண்டுவரப்பட்ட ‘ஹில் காப்’ பிரிவு) கணேசன் கூட்டத்துக்குள் நுழைந்து, அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். கணேசன், காவலர் சீருடையில் அண்ணாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அண்ணாமலையின் சமூக வலைதளப் பக்கத்திலும் பகிரப்பட்டது.
பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கின்றனர்.
அட பாவமே..ஒரு படம் எடுத்தற்காக இந்த தண்டனை என தற்போது சமூக போராளிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.