7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா – ஆளுநர் ஒப்புதல்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா – ஆளுநர் ஒப்புதல்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணையை வெளியிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு அந்த எண்ணிக்கை 1 சதவீதத்துகும் கீழே குறைந்தது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வாய்ப்பு அளிக்கும் வகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப் பேரவையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

இந்த 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆளுநர் காலதாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியானதால், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்தவப் படிப்பு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த மசோதாவுக்கு ஆளுநர் மனசாட்சிப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணையை வெளியிட்டது.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் 7.5% உள் ஒதுக்கீடு மசோதா சட்டமாகியுள்ளது.

முன்னதாக, 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு காலம் தாழ்த்தியபோது, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இந்த சட்டத்தை அரசானையாக வெளியிட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யலாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% உள் இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

administrator

Related Articles