‘800’ படம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; எல்லாம் முடிந்துவிட்டது: விஜய் சேதுபதி

‘800’ படம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; எல்லாம் முடிந்துவிட்டது: விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை உருவானது. அதிலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில், தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய் சேதுபதி “நன்றி வணக்கம்” என்று மட்டும் குறிப்பிட்டார். இந்த ட்வீட்டினால் விஜய் சேதுபதி நடிக்கிறாரா, விலகிவிட்டாரா என்ற குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் விஜய் சேதுபதி இன்று சந்தித்தார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமான நிலையில் அவரது மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வரின் தாயார் படத்துக்கு விஜய் சேதுபதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வரிடம் 2 நிமிடம் அமர்ந்து பேசி துக்கம் விசாரித்து தனது ஆறுதலைத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினார்.

முதல்வரின் வீட்டுக்கு வெளியே காருக்காக காத்திருந்த விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் ‘800’ பயோபிக் குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஜய் சேதுபதி பதில் அளிக்கையில், “நன்றி வணக்கம் என்ற பதிவு, முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனிமேல் அதைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.

‘800’ படத்திலிருந்து விலகிவிட்டீர்களா என்ற கேள்வியை மீண்டும் செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அப்போது விஜய் சேதுபதி, “அனைவருக்கும் புரிந்துவிட்டது தலைவா. எல்லாம் முடிந்துவிட்டது” என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

administrator

Related Articles