திருடப்பட்ட’ தானியங்களை விற்பனை செய்வதில் ஈடுபடக்கூடாது

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

மே 13, 03.29 a.m

‘திருடப்பட்ட’ தானியங்களை விற்பனை செய்வதில் ஈடுபடக்கூடாது – உக்ரைன் எச்சரிக்கை

உக்ரைன் நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட தானியங்களை விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைவரும் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

“இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பாளர்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்: திருடப்பட்டது யாருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை. திருடப்பட்ட தானியங்களை விற்பது, கொண்டு செல்வது அல்லது வாங்குவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள அனைவரும் குற்றத்திற்கு உடந்தையாக உள்ளனர்” என்று டிமிட்ரோ குலேபாவை மேற்கோள் காட்டி உக்ரைன் அமைச்சகத்தின் செய்திச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 13, 03.02 a.m

நேட்டோவுக்கு ஆதரவு: பின்லாந்துக்கு மாஸ்கோ எச்சரிக்கை

நேட்டோ நாடுகளின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க முற்படுவதால் பின்லாந்து கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மாஸ்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 13, 02.38 a.m

‘முதுகில் சுடப்பட்டது’: உக்ரைனில் ரஷியா போர்க்குற்றம் செய்ததாக குற்றச்சாட்டு

இரண்டு ஆயுதம் இல்லாத பொதுமக்களை கீவ்வுக்கு வெளியே சுட்டுக் கொன்றது உட்பட, ரஷியப் படைகள் செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான போர்க்குற்றங்களை உக்ரேனிய வழக்குரைஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான பாதுகாப்பு கேமரா காட்சிகளில், இரண்டு உக்ரேனிய பொதுமக்கள் ரஷிய படையினரால் கீவ் நகருக்கு வெளியே ஒரு கார் டீலர்ஷிப் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் அந்த இடத்திலேயே இறந்தார், மற்றவர் சிறிது நேரத்தில் இறந்தார். இந்த தாக்குதலை ஒரு போர்க்குற்றமாக வழக்குரைஞர்கள் விசாரித்து வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 13, 01.31 a.m

உக்ரைனில் விசாரணை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களிப்பு

உக்ரைன் விசாரணையை அமைக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திற்கு எதிராக சீனா நேற்று வாக்களித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 13, 12.40 a.m

செர்னிஹிவ் நகரத்தில் ரஷியா வான்தாக்குதல்: 3 பேர் பலி; வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு

உக்ரைனில் மரியுபோல் நகரை இன்னும் ரஷிய படைகள் பிடித்தபாடில்லை. இந்த நகரின் கடைசி கோட்டையாக கருதப்படுகிற அஜோவ் உருக்காலை இன்னும் வீழ வில்லை. அந்த உருக்காலையினுள் சுமார் ஆயிரம் உக்ரைன் படை வீரர்கள் சுரங்கங்களில் உள்ளனர். அவர்களில் பலர் காயங்களுடன் உள்ளனர். அங்கு நேற்றும் ரஷிய படைகள் வான்தாக்குதல் நடத்தின.

இந்த ஆலையில் படுகாயங்களுடன் உள்ள போர் வீரர்களை விடுவித்து அதற்கு பதிலாக ரஷிய போர்க்கைதிகளை விடுவிக்க உக்ரைன் முன்வந்துள்ளது. இதில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஆனாலும், பல்வேறு விருப்ப தேர்வுகள் இருந்தாலும் எதுவுமே சிறந்தது இல்லை என்று உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் ரஷியா குண்டு வீச்சைத் தொடர்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரியுபோல் நகர மேயரின் ஆலோசகர், நகரில் இருந்து வெளியேறுவதற்கான அனைத்து வழிகளையும் ரஷிய படைகள் தடை செய்துவிட்டதாக தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே உக்ரைனில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 62 வயதான அப்பாவி உள்ளூர்வாசியை சுட்டுக்கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டு பிடிபட்ட ரஷிய வீரர் வாடின் சிஷிமர் மீது கீவ் போர்க்குற்ற விசாரணை நடத்துகிறது.

மரியுபோல் நகரிலிருந்து தப்பிச்செல்லும் மக்களுக்கு புகலிடமாக உள்ள ஜபோரிஜியாவில் உக்ரைன் படை வீரர்களை குறிவைத்து, ரஷிய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதுடன் லாஞ்சர்கள் உதவியுடன் கையெறி குண்டுகளை வீசியது.

இதேபோன்று கார்கிவ் நகருக்கு வடக்கே உள்ள உக்ரைனிய படையினரை குறிவைத்து ரஷிய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளன.

இருப்பினும் கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் முன்னேற்றத்தில் வேகம் குறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷிய படையினரின் 9 தாக்குதல்களை உக்ரைன் படைகள் முறியடித்ததும், டிரோன்களையும், ராணுவ வாகனங்களை அழித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செர்னிஹிவ் நகர பகுதியில் ஒரே இரவில் ரஷிய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல்களை உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கிருந்த 2 வெடிமருந்து கிடங்குகளை தங்கள் படைகள் தாக்கி அழித்துள்ளதாக ரஷியா தெரிவித்தது.

மேலும் கார்கிவ் பகுதியில் உக்ரைனின் எஸ்-300 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பையும், ஒடேசா நகருக்கு அருகில் உள்ள ரேடார் நிலையத்தையும் ரஷியா அழித்ததாக அதன் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார்.

படையெடுப்பின் முதல் நாளில் ரஷியாவால் வீழ்த்தப்பட்ட பாம்பு தீவின் அருகே உக்ரைனின் டிரோனை வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியது.

Annachi News

Related post