ஐரோப்பிய பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ள மொத்த கொரோனா பாதிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் அது விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐரோப்பிய பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ள மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.80 கோடியாக பதிவாகி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் (20 லட்சத்து 3 ஆயிரத்து 81) உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

எனினும், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இந்த பகுதிகளில் குறைந்து வருகிறது என குறிப்பிட்ட அந்த அமைப்பு, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் தனிநபர்களுக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து தாக்கம் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரிக்கை தெரிவித்து உள்ளது.

அதனால், பல வகைகளில் உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை எடுக்கும்படி பொதுமக்களை அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. அதிக ஆபத்துள்ள நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பது, கொரோனா பரவலை கண்காணித்தல், ஒருவேளை பெருந்தொற்று தீவிர அளவில் பரவ தொடங்கினால் சுகாதார அமைப்புகளை தொடர்ந்து தயாராக வைத்திருத்தல், கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளை எதிர்கொள்வது உள்ளிட்ட விசயங்களில் பொதுமக்கள் விரிவான அளவில் கவனம் செலுத்தும்படியும் கேட்டு கொண்டுள்ளது.

Annachi News

Related post