சின்னவெங்காயம் தட்டுப்பாடு…..

விளைநிலங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் அழுகும் முன், ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி, நஷ்டத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், பெரம்பலுார், நாமக்கல், கிருஷ்ணகிரி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், ஆண்டுக்கு எட்டு மாதங்களில் ஐந்து சீசன்களாக சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது. வீரிய ரக விதை சாகுபடியில் ஏக்கருக்கு, அதிகபட்சமாக, 8 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது.

இதனால், மாநிலத்தின் தேவையை விட, ஒவ்வொரு சீசனிலும், உற்பத்தி பல மடங்கு கூடுதலாக உள்ளது.உள்நாட்டு தேவையை விட விளைச்சல், அதிகளவு இருந்ததால், மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (நேபட்) சின்னவெங்காயத்தை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.

இதனால், சின்னவெங்காயத்தின் சராசரி கொள்முதல் விலை உயரும்; விவசாயிகள் பாதிப்பதும் தவிர்க்கப்படும். அதிகபட்சமாக, கடந்த 1996–97ல் இந்தியாவிலிருந்து, 332.27 கோடி ரூபாய் மதிப்பிலான சின்னவெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.அதன்பின்னர், ‘நேபட்’ நிறுவனம் நேரடி கொள்முதலை கைவிட்டது. பெரிய வியாபாரிகள் இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் ஒப்பந்தம் ஏற்படுத்தி சின்னவெங்காயத்தை ஏற்றுமதி செய்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுமதி வாய்ப்பு முற்றிலுமாக குறைந்துள்ள நிலையில், கடந்த சீசனில், வழக்கத்தை விட, கூடுதல் பரப்பில், சின்னவெங்காயம் சாகுபடியானது.உடுமலை பகுதியிலும், பல ஆயிரம் ஏக்கரில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு, கடந்த மாதம் அறுவடை நடந்தது.

கொள்முதல் விலை கிலோ 10 ரூபாய் அளவுக்கு குறைந்ததால், பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் தற்போது விளைநிலங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கோடை கால மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இருப்பு வைத்துள்ள சின்னவெங்காயத்தின் தரம் குறைந்து வருகிறது.உடுமலை பகுதி விவசாயிகள் கூறியதாவது: தேவையை விட, கூடுதல் விளைச்சல் உள்ள சீசன்களில், ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதனால், விவசாயிகள், நுகர்வோர் என இரு தரப்பினரும் பாதிப்பது தவிர்க்கப்படும்.

விலை சரிவால், அடுத்த சீசனில், வெங்காயம் நடவு செய்வதை விவசாயிகள் தவிர்த்தால், தட்டுப்பாடு அதிகரித்து, விலை அதிகரிக்கும். எனவே, தென்மேற்கு பருமழை சீசன் துவங்கும் முன், சின்னவெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசு உதவ வேண்டும்.விளைநிலங்களில், இருப்பு வைத்துள்ள சின்னவெங்காயம் அழுகினால், அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Annachi News

Related post