ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் கொலை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், கணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் ஒன்றரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் சத்தியவாணி வயது (24) என்ற தாயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொரியவருவதாவது,

உயிரிழந்த இளம் பெண்ணின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்து வருவதுடன், பகுதி நேர வருமானத்திற்கு நுவரெலியா நகரில் முச்சக்கரவண்டி சாரதியாகவும் பணியாற்றி வருகின்றார்..

சம்பவ தினமான நேற்று (25) இரவு தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பிய கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததுடன், கணவன் தனது இளய மகளைத் தூக்கிக் கொண்டு,  இரவோடு இரவாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு இன்று (26) காலை நுவரெலியா மாவட்ட நீதவான் விஜயம் செய்து மரண விசாரணை நடத்தியுள்ளார்.

நீதவானின் உத்தரவுக்கு அமைய, சடலம் சட்டவைத்தியர் ஒருவரின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

(க.கிஷாந்தன்)

Jesudasan

Related post