மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை கை விடுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தெரிவித்தது.
இதையடுத்து, அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முடிக்கப்பட்டது.கடந்த 1996 – 97ம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை, சசிகலா தாக்கல் செய்யவில்லை என, வருமான வரித் துறை ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
அதற்கு, சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, 1996 – 97ல், சசிகலாவின் சொத்து மதிப்பு 4.97 கோடி ரூபாயாக தீர்மானித்த வருமான வரித் துறை, செல்வ வரியாக 10.13 லட்சம் ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், சசிகலா மனு தாக்கல் செய்தார்.மனுவை பரிசீலித்த தீர்ப்பாயம், 40 லட்சம் ரூபாய் கடன் தொகையை கணக்கீட்டில் சேர்த்து, மீண்டும் மதிப்பீடு செய்யும்படி, வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித் துறை தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 1 கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை கைவிடுவதாக, வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர். இதேபோல், சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராக வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது.