தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

அதேபோல நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்கு தமிழ் ஆளுநர்களை நியமிக்குமாறு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

மக்களின் கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றியமை வரவேற்கதக்கது.

வடக்கு மாகாணத்தில் தமிழ் ஆளுநர்கள் பதவி வகித்தபோதும் கிழக்கு மண்ணுக்கு முதன்முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் மகிழ்ச்சி.

அதுவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அந்த பதவிக்கு வந்திருப்பது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

நாட்டில் மாகாணசபைகளில் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லை. எனவே, நிர்வாகம் என்பது ஆளுநர் வசமும், பிரதம செயலாளர்கள் வசமும்தான் உள்ளன. எனவே, கிழக்கு மாகாணத்தில் சிறந்த சேவையை புதிய ஆளுநர் வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அவர் மூலம் சிறந்த சேவையை பெற்றுக்கொள்ளுமாறு மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

செந்தில் தொண்டமான் மாகாணசபை உறுப்பினராக, அமைச்சராக, பதில் முதல்வராக பதவி வகித்துள்ளார். ஆக மத்திய அரசுக்கும், மாகாண அரசுக்கும் இடையில் ஏற்படும் நெருக்கடிகளை எப்படி சமாளிப்பது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆகவே, சிறப்பான சேவைகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *