அதானி குழுமப் பங்குகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை கடும் சரிவுடன் வர்த்தகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், வெள்ளிக்கிழமை காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும், அதானியின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர்கள் சரிந்து 100 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. இதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
பில் கேட்ஸ் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர்கள். கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் 3-வது இடத்திலேயே அதானி நீடித்திருந்தார்
அதானியின் தொழில் போட்டியாளரும், ரிலையன்ஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி, 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிடப்பட்டுள்ளது.
எங்கள் வீழ்ச்சியில் இருந்து ஹிண்டட் பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது. அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என அதானி குழுமத்தின் தலைமை சட்ட ஆலோசகர் ஜதின் ஜலுந்த்வாலா தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க்-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த அதானி குழுமத்தின் எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எங்களின் விரிவான அறிக்கை இருப்பதாகவும் அதற்கு எதிரான எந்தவொரு சட்டவடிக்கையும் தகுதியற்றதாகவே இருக்கும் எனவும் ஹிண்டன்பர்க் பதிலளித்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனமான அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.