அதிபர் விளாடிமிர் புதின் வசிக்கும் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்” பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேற்றிரவு மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்லினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.

அத்துடன்,  அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல அவை ஏவப்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு சிறிய வெடிப்புடன் கிரெம்லினில் ஏதோ பறப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

எவ்வாறாயினும், ஆளில்லா விமான தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.

இரண்டு உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை அதிகாலை கிரெம்லினைத் தாக்க முயன்றதாகவும், ஆனால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த “பயங்கரவாத தாக்குதலில்” அதிபர் காயமடையவில்லை என்றும் கிரெம்லின் மாளிகை வளாகத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் புதினின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மே 9 ஆம் திகதி ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.

இரண்டாம் உலகப் போரில்  ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான வெற்றியின் நினைவாக கிரெம்லின் மாளிகை அருகில் சிவப்பு சதுக்கத்தில் வருடாந்தம் இராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *